/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தடுப்பணைகளை துார்வார வலியுறுத்தல்
/
தடுப்பணைகளை துார்வார வலியுறுத்தல்
ADDED : ஜன 29, 2025 10:45 PM
பந்தலுார்; நெல்லியாளம் நகராட்சியில் மாதாந்திர கூட்டம் நடந்தது. கமிஷனர் முனியப்பன் வரவேற்றார். தலைவர் சிவகாமி தலைமை வகித்தார்.
கூட்டம் துவங்கியதும், நகராட்சியின், 21 வார்டுகளில் குப்பைகளை அகற்றும் ஒப்பந்த பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரரின், கால அவகாசம் நிறைவுற்ற நிலையில், புதுப்பிக்க ஒப்புதல் கோரப்பட்டது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.,வை சேர்ந்த கவுன்சிலர் ஜாபீர் கருப்பு சட்டை அணிந்து வந்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். கவுன்சிலர் சேகர் தலைமையில் மற்ற அனைத்து கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்ததால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து. 'தற்காலிக குடிநீர் உதவியாளர்கள், 4 -பேரை தற்காலிக பணியில் அமர்த்த வேண்டும்; அவர்கள் மூலமாக கோடை காலத்தில் தண்ணீர் பிரச்னை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; கோடை காலத்தில் குடிநீர் வினியோகம் செய்ய ஏதுவாக தடுப்பணைகளை துார் வாரி சுத்தம் செய்ய நடவடிக்கை அவசியம்,' என, வலியுறுத்தப்பட்டது.
குப்பைகளை அகற்றும் பணியை துப்புரவு ஆய்வாளர் ஆய்வு செய்ய தலைவர் சிவகாமி வலியுறுத்தினார்.
தலைவர் துணை தலைவர் மீதான லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை குறித்து தகவல் தெரிவிக்க கவுன்சிலர் புவனேஸ்வரன் வலியுறுத்தினார்.
'அது குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், முழுமையான தகவல் தெரிவிக்க இயலாது,' என, கமிஷனர் தெரிவித்தார். துணை தலைவர் நாகராஜ் நன்றி கூறினார்.

