/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொரப்பள்ளி--தெப்பக்காடு இடையே மின் கேபிள் அமைக்கும் பணி தீவிரம்
/
தொரப்பள்ளி--தெப்பக்காடு இடையே மின் கேபிள் அமைக்கும் பணி தீவிரம்
தொரப்பள்ளி--தெப்பக்காடு இடையே மின் கேபிள் அமைக்கும் பணி தீவிரம்
தொரப்பள்ளி--தெப்பக்காடு இடையே மின் கேபிள் அமைக்கும் பணி தீவிரம்
ADDED : அக் 18, 2024 10:01 PM

கூடலுார்: முதுமலை வனப்பகுதி வழியாக, பாதுகாப்பாக மின் சப்ளை செய்யும் வகையில், தொரப்பள்ளி -- தெப்பக்காடு இடையே, மின் கேபிள் அமைக்கும் பணியில் வட மாநில ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
முதுமலை புலிகள் காப்பகம், அபயாரண்யம், கார்குடி, தெப்பக்காடு குடியிருப்பு பகுதிக்கு, தொரப்பள்ளியில் இருந்து மின் கம்பிகள் மூலம் மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது.
மின்கம்பம் மற்றும் மின்கம்பிகள் வனப்பகுதி வழியாக செல்வதால், மரம் மற்றும் கிளைகள் மின்கம்பிகளின் மீது விழுந்து அடிக்கடி மின் சப்ளை துண்டிக்கப்படுவதுடன், வனவிலங்குகள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இதற்கு தீர்வாக, தொரப்பள்ளி - தெப்பக்காடு இடையே, மின் கேபிள் அமைக்க வனத்துறை சார்பில், 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான, பணிகள் ஜூலை மாதம் துவங்கப்பட்டது.
தொடர்ந்து, சாலையோர வனப்பகுதியில் மின்கம்பங்கள் நடவு செய்யும் பணி நிறைவு பெற்ற நிலையில், அதில் மின் கேபிள்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியில் வட மாநில ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பணி விரைவில் முடிக்கப்பட்டு, அதன் வழியாக தெரபள்ளியில் இருந்து தெப்பக்காடு வரை மின் சப்ளை வழங்கப்பட உள்ளது.
அதிகாரிகள் கூறுகையில், 'முதுமலை, வனப்பகுதிக்குள், மின் கம்பிகளுக்கு மாற்றாக, மின் கேபிள் மூலம் மின்சாரம் சப்ளை செய்யும் பணிகளை, மின் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இப்பணிகள், முடிந்த பின் கேபிள் மூலம் மின் சப்ளை வழங்கப்படும். இதன் மூலம், வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படுவது தடுக்கப்படும்.
மின் சப்ளைகளும் பாதிப்பு இருக்காது. மின் இழப்பீடும் குறைவாகவே இருக்கும்,' என்றனர்.

