/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மீன் வளர்ப்பதில் ஆர்வம்: குளம் அமைக்க அரசு உதவி
/
மீன் வளர்ப்பதில் ஆர்வம்: குளம் அமைக்க அரசு உதவி
ADDED : அக் 31, 2024 09:25 PM

பந்தலுார்; பந்தலுார் பகுதிகளில் மீன்வளர்க்க ஏதுவாக, அரசு குளங்கள் அமைத்து தருவதால் விவசாயிகள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கூடலுார் ஊராட்சி ஒன்றியம் சார்பில், விவசாயிகள் பயன் பெற ஏதுவாக குளங்கள் அமைத்து தரப்படுகிறது.
பட்டா நிலங்களில் விவசாயம் மேற்கொள்ளும் நிலையில், கோடை காலங்களில் வறட்சியை சமாளிக்கும் வகையில், மழை காலங்களில் தண்ணீரை சேமித்து வைக்க, 100 நாள் திட்டம் மூலம் குளங்கள் அனைத்து தரப்படுகிறது. இந்த குளங்களை அமைத்து பயன்பெறும் விவசாயிகள், கோடைகாலங்களில் தண்ணீரை தங்கள் விவசாய தோட்டத்திற்கு பாய்ச்சி பயன்பெற்று வருவதுடன், குளங்களில் மீன் வளர்த்து வருவாய் ஈட்டி வருகின்றனர்.
கேரளா மாநிலத்தில் இருந்து பல்வேறு வகை மீன்கள் வாங்கி வரப்பட்டு, இது போன்ற குளங்களில் வளர்க்கப்பட்டு வருகிறது. ஒரு பக்கம் கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்க்க இந்த குளங்கள் பயன்படுகிறது.
இதனால் விவசாயிகளுக்கு தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுவதுடன், சுய வேலைவாய்ப்பும் கிடைக்கிறது. சேரம்பாடியை சேர்ந்த யோகா என்பவர் கூறுகையில், ''ஊராட்சி ஒன்றிய மூலம் கட்டி தரப்படும் இது போன்ற குளங்களை, ஒரு சில விவசாயிகள் முறையாக பராமரிக்காததால் அவை புதர் சூழ்ந்து பயனின்றி உள்ளது.
ஆனால், நான் முறையாக பராமரித்து, கோடை காலங்களில் தேயிலை மற்றும் காபி தோட்டங்களுக்கு தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வருவதுடன், மீன் வளர்த்து வருவதால் நல்ல பயனை தருகிறது. எனவே, அரசு இதுபோன்ற பயன் தரும் திட்டங்களை செயல்படுத்தி தரும்போது, விவசாயிகள் இதன் மூலம் வாழ்வில் மேம்பட முன் வரவேண்டும்,''என்றார்.