ADDED : செப் 18, 2024 08:48 PM

பந்தலுார் : சர்வதேச ஓசோன் தினத்தை முன்னிட்டு, பந்தலுாரில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மரக்கன்றுகளுடன் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம், தேவாலா வனத்துறை, 'ஆல் தி சில்ட்ரன்' அமைப்பு இணைந்து, சர்வதேச ஓசோன் தினத்தை முன்னிட்டு, பந்தலுாரில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின.
பந்தலுார் புதிய பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ''சூரியனிலிருந்து வரும் ஆற்றல்மிக்க புற ஊதா கதிர்களை, முழுவதுமாக பூமிக்கு சென்றடையாமல் தடுப்பதுதான் ஓசோன் படலம்.
இதனால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. புற ஊதா கதிர்களில், 93 சதவீதத்தை தடுப்பதால் கடந்த நுாறு ஆண்டுகளில், பூமியின் வெப்பநிலை, 0.74 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. எனவே, இயற்கையை பாதுகாத்து, ஓசோன் படலம் பாதிப்பதை தடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்,'' என்றார்.
வனச்சரகர் சஞ்சீவி பேசுகையில், ''இயற்கையை பாதுகாப்பதில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நிலை உருவாகி உள்ளது. இயற்கையை அழிப்பது, சுற்றுச்சூழல் மற்றும் ஓசோன் படலத்தை பாதிக்கும், பிளாஸ்டிக் உள்ளிட்ட நச்சு பொருட்களை எரிப்பது போன்ற செயல்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
வனங்களின் பரப்பளவு அதிகரிக்கும் வகையில், மரக்கன்றுகள் நடவும் அவற்றை பாதுகாக்கவும் பொதுமக்கள் முன்வர வேண்டும். தற்போது தேவாலா வனச்சரகத்தில் மரக்கன்றுகள் நடுவதற்கு தயார் நிலையில் உள்ளதால், மக்கள் அவற்றை வாங்கி நடுவதற்கு முன்வர வேண்டும்,'' என்றார்.
நகராட்சி ஆணையாளர் முனியப்பன், நகராட்சி தலைவர் சிவகாமி ஆகியோர் தலைமையில், உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது. தொடர்ந்து, நடந்த ஊர்வலத்தில் மாணவர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கைகளில் மரக்கன்றுகளை, வைத்துக்கொண்டு ஊர்வலமாக வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து, அரசு மேல்நிலைப்பள்ளியில் ஊர்வலம் நிறைவு செய்யப்பட்டு, நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் தேவாலா வனத்துறை சார்பில் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. 'ஆல் தி சில்ட்ரன்' மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித்நன்றி கூறினார்.
