/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வருவாய் துறை அதிகாரிகளிடம் விசாரணை; 'ஆன்லைன்' பண பரிவர்த்தனை அனைத்தும் அம்பலம்
/
வருவாய் துறை அதிகாரிகளிடம் விசாரணை; 'ஆன்லைன்' பண பரிவர்த்தனை அனைத்தும் அம்பலம்
வருவாய் துறை அதிகாரிகளிடம் விசாரணை; 'ஆன்லைன்' பண பரிவர்த்தனை அனைத்தும் அம்பலம்
வருவாய் துறை அதிகாரிகளிடம் விசாரணை; 'ஆன்லைன்' பண பரிவர்த்தனை அனைத்தும் அம்பலம்
ADDED : அக் 27, 2024 11:59 PM

கோத்தகிரி : கோத்தகிரி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், 'ஆன்லைன்' பண பரிவர்த்தனையில், 7 லட்சம் ரூபாய் பெற்றது அம்பலமாகி உள்ளது.
கோத்தகிரியில் வருவாய் துறையினர், நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல் மற்றும் அனுபோக சான்று பெறுவதற்கும் மற்றும் கோர்ட் உத்தரவை மீறி பொக்லைன் இயக்குவதற்கும் புரோக்கர்கள் மூலம் லஞ்சம் பெறுவதாக புகார் இருந்து வருகிறது.
இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்ற தகவலின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் பரிமளா தேவி தலைமையில், 23ம் தேதி இரவு அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அலுவலக கதவுகளை மூடிய அதிகாரிகள், தாசில்தார், வி.ஏ.ஓ.,கள், அலுவலக ஊழியர்களிடம், தனித்தனியாக விசாரணை நடத்தி, சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மொபைல் போன்கள் ஆய்வு
அதில், கோத்தகிரி வி.ஏ.ஓ., கமல்ராஜிடம் இருந்து, 6,000 ரூபாய்; ஜெகதளா வி.ஏ.ஓ. நவீன்குமாரிடம் இருந்து, 4,200 ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், தாசில்தார், துணை தாசில்தார், உதவியாளர்கள், வி.ஏ.ஓ.,க்களின் மொபைல் போன்கள் வாங்கி அதில் இருந்து, 'ஜிபே, போன்பே, வாட்ஸ்-ஆப்' செயலியை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையில், தாசில்தார் கோமதிக்கு, 'ஜிபே' வாயிலாக, ஜூன், 6 முதல், அக்., 11ம் தேதிவரை, 33 பதிவுகளில் இருந்து, 4.91 லட்சம் ரூபாய் மதுரையில் பாரதஸ்டேட் வங்கி, கனரா வங்கி மற்றும் இந்தியன் வங்கி கிளை சேமிப்பு கணக்குகளில் பண பரிவர்த்தனை நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதே போல, துணை தாசில்தார் உமா மகேஸ்வரி வங்கி கணக்கில், 'போன்பே' வாயிலாக, மே., 30 முதல் செப்., 24ம் தேதி வரை அவரது வங்கி கணக்கில், ஏழு பதிவுகளில் வெவ்வேறு எண்களில் இருந்து, வங்கி கணக்கிற்கு வெவ்வேறு நபர்களிடம் இருந்து, 1.28 லட்சம் ரூபாய் பெற்றிருந்தது தெரியவந்தது.
கோத்தகிரி வி.ஏ.ஓ., கமல்ராஜ், 'போன்பே' மூலம், ஜூன் 10 முதல் அக்., 8ம் தேதி வரை, ஒன்பது வெவ்வேறு எண்களில் இருந்து, 10,200 ரூபாய் வாங்கியதற்கான பதிவுகள் இருந்துள்ளது.
அரக்கோடு, கொக்கோடு வி.ஏ.ஓ., பிரியா, 'ஜிபே' மூலம் ஜூன் 22 முதல் அக்.,19ம்தேதி வரை, 15 வெவ்வேறு எண்களில் இருந்து, இவரது வங்கி கணக்கிற்கு, 54,750 ரூபாய் பெற்றதற்கான பதிவுகள் இருந்தன.
இந்த தகவல்கள் அனைத்தையும், அவர்களது மொபைல் போனில் இருந்து, பதிவிறக்கம் செய்து விசாரணைக்கு அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர். லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மீது, வழக்குப்பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.