/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இரு மாநில வாகனங்கள் செல்லும் கிராம சாலைகளில் தடுமாறும் பயணங்கள்! உள்ளூர் மக்களின் குரலுக்கு செவி சாய்க்க யாருமில்லை
/
இரு மாநில வாகனங்கள் செல்லும் கிராம சாலைகளில் தடுமாறும் பயணங்கள்! உள்ளூர் மக்களின் குரலுக்கு செவி சாய்க்க யாருமில்லை
இரு மாநில வாகனங்கள் செல்லும் கிராம சாலைகளில் தடுமாறும் பயணங்கள்! உள்ளூர் மக்களின் குரலுக்கு செவி சாய்க்க யாருமில்லை
இரு மாநில வாகனங்கள் செல்லும் கிராம சாலைகளில் தடுமாறும் பயணங்கள்! உள்ளூர் மக்களின் குரலுக்கு செவி சாய்க்க யாருமில்லை
ADDED : ஜன 30, 2025 09:43 PM

பந்தலுார்; தமிழக- கேரள எல்லையில், இரு மாநில வாகனங்கள் செல்லும் கிராம சாலைகள் மிகவும் சேதமடைந்து காணப்படுவதால் உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல், வெளியூர் பயணிகளும் அவதிப்படுகின்றனர்.
இரு மாநில எல்லையில் உள்ள, பந்தலுார் பகுதியில் அமைந்துள்ள சேரங்கோடு ஊராட்சி, மாநிலத்தில் பெரிய ஊராட்சியாக உள்ளது. இங்கு, 120க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களின் சாலைகள் உள்ளூர் மட்டுமல்லாமல், கேரள கிராமங்களுக்கு செல்வதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இங்குள்ள பெரும்பாலான சாலைகள் மிகவும் சேதமடைந்து காணப்படுவதால், இரு மாநில வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
சீசன் காலங்களில் திணறல்
குறிப்பாக, கோடைசீசன் காலங்களில், தேசிய நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் ஏற்படும் போது, இங்குள்ள கிராம சாலைகள் சிறு வாகனங்கள் செல்ல பயன்படுகின்றன. ஆனால், ஊராட்சி நிர்வாகம் இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சாலைகளை சீரமைப்பதில் கவனம் செலுத்துவதில்லை.
சேரங்கோடு ஊராட்சி தலைவராக இருந்த லில்லி என்பவர் கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் இதற்கான நடவடிக்கை எடுக்க வில்லை. இவர் மீது, 'ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு; அரசு தொகுப்பு வீடு வழங்குவதில் பாரபட்சம்; பணிகள் ஒதுகுவதில் லஞ்சம் பெற்றாத எழுந்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்பு துறையின் விசாரணை,' போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.
தோட்ட தொழிலாளர்கள் பாதிப்பு
சாலைகள் சேதமடைந்துள்ளதால், தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் வனப்பகுதி சாலைகளை கடந்து செல்லும் சூழலில், அடிக்கடி வனவிலங்கு-- மனித மோதல் ஏற்படுகிறது. சாலைகளை சீரமைக்க, கிராம மக்கள் உள்ளூர் வார்டு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகம் வரை, மனுக்கள் கொடுத்தும் பயனில்லை.
அதிலும், யானை, கரடி, புலி நடமாட்டம் உள்ள, புஞ்சைக்கொல்லி-- செம்பக்கொல்லி சாலையை சீரமைக்காததால் கிராமத்து மக்கள், தொழிலாளர்கள், 5 கி.மீ., துாரம் நடந்து செல்ல வேண்டிய நிலை தொடர்கிறது. அவசர நேரங்களில் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் நோயாளிகளை, மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லவும் முடியாமல், சிரமப்படுகின்றனர். சமீப காலமாக, தமிழக- கேரள வாகனங்களும் வருவதில்லை.
கிராம தன்னார்வலர் அசோக்குமார் கூறுகையில்,'' பந்தலுார் பகுதி மாநில எல்லையில் உள்ளதால், கோடை சீசன், அவசர காலங்களில் இங்குள்ள கிராம சாலைகளை, தமிழக- கேரள சிறிய வாகனங்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றன.
இப்பகுதியில் உள்ள சேரங்கோடு ஊராட்சியில், கடந்த ஐந்து ஆண்டுகளில் வசதி படைத்தவர்கள் மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகள் வாழும் பகுதியில் வளர்ச்சி பணிகள் நடந்துள்ளன.
இந்நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த எல்லையோர கிராம சாலைகளை மாவட்ட நிர்வாகம் சீரமைத்தால், உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல், தமிழக- கேரள பயணிகளுக்கும் பயன் ஏற்படும்,'' என்றார்.