ADDED : செப் 21, 2024 05:52 AM

குன்னூர் : நீலகிரி மாவட்டம், குன்னுார் தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்க (உபாசி) 131வது மாநாடு நேற்று துவங்கியது. மாநாட்டில் பல்வேறு தொழில் நிறுவனங்களின் கண்காட்சி இடம் பெற்றுள்ளது.
அதில், உபாசி மற்றும் கர்நாடக மாநில 'டிரான்ஸ்' பல்கலை கழக ஒழுங்கு முறை சுகாதார அறிவியல் துறை சார்பில், மதிப்பு கூட்டப்பட்ட தேயிலை காட்சி அரங்கு வைக்கப்பட்டுள்ளது. அதில், ஆர்த்தோடக்ஸ் மற்றும் சி.டி.சி., ரக தேயிலை துாள்களில், மூலிகைகள் கலந்த மதிப்பு கூட்டப்பட்ட டீ கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.
'குளோரோபிட்டம் டியூபரோசம்' எனும் விபுருத்தி; 'பைலான்தஸ் அமரஸ்' எனும் கீழா நெல்லி; 'பிளம்பகோ ஸைய்லனிகா' எனும் சித்தரகம்; 'சின்னமோமம் ஸைய்லனிகம்' எனும் கருவா பட்டை; 'ஒசிமம் கிராட்டிசிமம்' எனும் கிராம்பு துளசி ஆகியமூலிகைகளில் ஆர்த்தோடக்ஸ் ரகங்களில் டீ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், 'ரூபியா கார்டிபோலியா' எனும் மஞ்சட்டி; 'அஸ்பாரகஸ் ரேஸ்மோசஸ்' எனும் சாத்தாவாரி; 'விதானியா சோம்னிபெரா' எனும் அமுக்கிரா; 'செலாஸ்ட்ரஸ் பானிகுலட்டஸ்' எனும் மண்ணைக்கட்டி; 'பைபர் லாங்கம்' எனும் திப்பிலி,' போன்ற மூலிகைகளை, சி.டி.சி., ரகத்திலும் கலந்து மதிப்பு கூட்டப்பட்ட டீ தயாரிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது.
உபாசி தேயிலை ஆராய்ச்சி பவுண்டேஷன் தொழில்நுட்ப ஆலோசகர் டாக்டர் பூபதி ராஜ் கூறுகையில், ''டிரான்ஸ் பல்கலைகழகத்துடன் இணைந்து கடந்த ஓராண்டு காலமாக மதிப்பு கூட்டப்பட்ட தேயிலை தயாரிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தந்த மூலிகைக்கு ஏற்ப தயாரித்த டீ, பாக்டீரியா எதிர்ப்பு விளைவு, ஊட்டச்சத்து, அறிவாற்றல், குடல் ஆரோக்கியம், இருமல், ஜலதோஷத்துக்கு தீர்வு, உள்ளிட்ட மருத்துவ குணம் வாய்ந்ததாக உள்ளது,'' என்றார்.