/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வாரசந்தை மத்திய, மாநில திட்டங்களில் பயன்பெற அழைப்பு
/
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வாரசந்தை மத்திய, மாநில திட்டங்களில் பயன்பெற அழைப்பு
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வாரசந்தை மத்திய, மாநில திட்டங்களில் பயன்பெற அழைப்பு
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வாரசந்தை மத்திய, மாநில திட்டங்களில் பயன்பெற அழைப்பு
ADDED : பிப் 19, 2024 12:26 AM
குன்னுார்:நீலகிரியில், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் துவக்கப்படும், வார சந்தையில் பங்கேற்று பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், தேயிலைக்கு அடுத்தபடியாக கேரட், உருளைகிழங்கு, பீட்ரூட், பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் ஏலக்காய், குறுமிளகு, கிராம்பு உள்ளிட்ட வாசனை திரவிய பயர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
இந்த பயிர்களில் அதிகளவில் பயன்படுத்தும் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளால் ஏற்படும் தீங்குகளால், இயற்கை வேளாண் (ஆர்கானிக்) திட்டத்தை மேற்கொள்ள விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் ஊக்குவித்து வருகிறது.
'ஆர்கானிக் நீலகிரி'
இதன் ஒரு பகுதியாக, 2019ம் ஆண்டில் மாநில தோட்ட கலை துறை சார்பில் உருவாக்கிய வளர்ச்சி திட்டத்தில், மாவட்டத்தில், 'ஆர்கானிக் நீலகிரி மிஷன் திட்டம்' செயல்படுத்தி, இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இதற்காக 'மொபைல் ஆப்' உருவாக்கப்பட்டது.
இந்நிலையில், 2023-- 24ம் நிதி ஆண்டு வேளாண் நிதி நிலை அறிக்கையில், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க, சிறப்பு திட்டத்திற்கு, 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதில், 'விவசாயத்தில் வேதியியல் உரங்களின் பயன்பாட்டை குறைத்தல்; அங்கக வேளாண்மை சாகுபடி முறைகளை அறிமுகப்படுத்துதல்; மண்புழு உரம்; பஞ்சகவ்யம்; தசகவியம் உற்பத்திக்கு ஆலோசனை; சாகுபடி மானியம் வழங்குதல்; அங்கங்க (ஆர்கானிக்) சான்று பெற பதிவு செய்தல் ; இயற்கை விவசாய விளை பொருட்களுக்கு அங்காடிகள் ஏற்படுத்துதல்,' போன்றவற்றிற்கு முதற்கட்டமாக, 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
38 கிராமங்களில் இயற்கை விவசாயம்
அதில், முதற்கட்டமாக, 'குன்னுார் அருகே அதிகரட்டி; ஊட்டியில் உல்லத்தி; கோத்தகிரியில் கூக்கல்,' என, 38 குக் கிராமங்களில், 250 எக்டர் பரப்பளவில் காய்கறி பயிர்களில் இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படுகிறது.
மேலும், கூடலுார், பந்தலுார் பகுதிகளில் குறுமிளகு, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி ஜாதிக்காய், பட்டை, லவங்கம் போன்ற சுவை தானிய பயிர்கள், 3000 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்ட கலெக்டர் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
நீலகிரி தோட்டக்கலை, இயற்கை விவசாயிகள் சங்க தலைவர் பெள்ளியப்பன் மற்றும் விவசாயி வேணுகோபால் கூறுகையில், ''நீலகிரி மாவட்டத்தில் பூச்சிமருந்து அதிகம் பயன்படுத்துவதை தடுக்கவும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும், அங்கக வேளாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கிராமங்களில் மாசற்ற நீர்நிலையில் விளையும் பகுதிகள், நீர்நிலை மற்றும் மண் பாதித்த பகுதிகள் என இரு பிரிவுகளை முன்னிலைப் படுத்தி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஊட்டி சேரிங்கிராஸ் தோட்ட கலை மையத்தில் 'ஆர்கானிக்' மையம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு, 19ம் தேதி (இன்று) வார சந்தையும் துவங்கப்பட உள்ளது. விவசாயிகள் அதிகளவில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க முன்வர வேண்டும்,'' என்றனர்.

