/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுாரில் கடும் வெயிலில் சாலையில் தண்டால் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு தண்டனையா...?
/
கூடலுாரில் கடும் வெயிலில் சாலையில் தண்டால் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு தண்டனையா...?
கூடலுாரில் கடும் வெயிலில் சாலையில் தண்டால் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு தண்டனையா...?
கூடலுாரில் கடும் வெயிலில் சாலையில் தண்டால் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு தண்டனையா...?
ADDED : ஏப் 15, 2025 09:16 PM

கூடலுார்,; கூடலுாரில் உச்சி வெயிலில் வேட்டை தடுப்பு காவலர்களை அணிவகுப்பு என்ற பெயரில் ஓடவிட்டு, தார் சாலை வெப்பத்தில் தண்டால் எடுக்க வைத்ததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
கூடலுார் பகுதியில், பணியாற்றி வரும் வேட்டை தடுப்பு காவலர்கள், யானை விரட்டும் குழுவினர் வனப்பகுதியில் கண்காணிப்பு மற்றும் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
யானை -மனித மோதல் அதிகரித்த நிலையில், வேட்டை தடுப்பு காவலர்கள், யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், யானை - மனித மோதல் ஓரளவு குறைந்துள்ளது. இந்நிலையில், சேரம்பாடி உள்ளிட்ட பகுதியில் பணியாற்றி வரும் வேட்டை தடுப்பு காவலர்கள் அதிகாரிகள் உத்தரவுப்படி, நேற்று மதியம் கூடலுார் மாக்கமூலாவில் உள்ள, மாவட்ட வன அலுவலர் அலுவலகம் வந்தனர்.
தொடர்ந்து, உதவி வன பாதுகாவலர் கருப்பையா முன்னிலையில், வேட்டை தடுப்பு காவலர்கள் மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுப்பு மேற்கொண்டனர்.
மார்த்தோமா நகர் அருகே, ஏழுமுறம் செல்லும் சாலைக்கு சென்ற வேட்டை தடுப்பு காவலர்களை, அதிகாரிகள் தண்டால் எடுக்க வைத்தனர்.
தார் சாலையில் வெப்பம் அதிகரித்தன் காரணமாக, கையை ஊன்றி ஊழியர்கள் தண்டால் எடுக்க சிரமப்பட்டனர். இதனை பார்த்த மக்கள், 'கடும் வெயிலில் வன ஊழியர்கள் அணிவகுப்பு என்ற பெயரில் ஓடவிட்டு, சாலையில் தண்டால் எடுக்க வைத்த சம்பவம், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.
கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறுகையில், ''வழக்கமான முறையில், வேட்டை தடுப்பு காவலர்கள் அணிவகுப்பு மேற்கொண்டனர்.
இது தவிர்த்து சாலையில் தண்டால் போன்ற வேறு செயல்களில் ஈடுபட்டது தொடர்பான புகார் குறித்து, விசாரணை மேற்கொள்ளப்படும்,''என்றார்.

