/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மலை காய்கறி ஏலம் நடத்தினால் லாபம்! மேட்டுப்பாளையம் செல்வதற்கான செலவு மிஞ்சும்
/
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மலை காய்கறி ஏலம் நடத்தினால் லாபம்! மேட்டுப்பாளையம் செல்வதற்கான செலவு மிஞ்சும்
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மலை காய்கறி ஏலம் நடத்தினால் லாபம்! மேட்டுப்பாளையம் செல்வதற்கான செலவு மிஞ்சும்
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மலை காய்கறி ஏலம் நடத்தினால் லாபம்! மேட்டுப்பாளையம் செல்வதற்கான செலவு மிஞ்சும்
ADDED : ஆக 26, 2025 09:32 PM

குன்னுார்; குன்னுார் இளித்தொரை கிராமத்தில் துவக்கப்பட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், மலை காய்கறி ஏலம் நடத்தினால், விவசாயிகள் மேட்டுப்பாளையம் செல்வது குறைய வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தில், உருளைகிழங்கு, கேரட், பீட்ரூட் உட்பட மலை காய்கறிகள் விவசாயம் அதிகம் மேற்கொள்ளப்படுகிறது. அதில், ஊட்டி, குன்னுார், குந்தா உட்பட பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் பூண்டு விவசாயம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இங்கு விளைவிக்கும் மலை தோட்ட காய்கறிகள் மேட்டுப்பாளையம் கொண்டு செல்லப்பட்டு ஏலம் விடப்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கு போக்குவரத்து செலவு, மண்டிகளில் ஏலம் விட,10 சதவீத கமிஷன் மற்றும் கிடங்கில் சேமித்து வைக்க முடியாத சூழ்நிலை உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பல இன்னல்களை சந்திக்கின்றனர்.
ஒருங்கிணைந்த வேளாண் சந்தை இந்நிலையில், வியாபாரிகள் மற்றும் காய்கறி வாங்க வருபவர்கள், மின்னணு வர்த்தகத்தின் மூலம் நீலகிரி விவசாயிகளின், விளை பொருட்களை எளிதாக விற்கவும், வாங்கவும் வழி செய்ய, கடந்த, 2021ல் ஒருங்கிணைந்த வேளாண் சந்தை அமைக்க, அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையில், அறிவிக்கப்பட்டது. அதன்பின், குன்னுார் எடப்பள்ளி இளித்தொரை கிராமம் அருகே, 6.5 ஏக்கரில் 2 கோடி ரூபாய் மதிப்பில், ஒருங்கிணைந்த வேளாண் சந்தை அமைக்கப்பட்டு, கடந்த, 2024 மார்ச் 13ல், திறந்து வைக்கப்பட்டது.
ஓராண்டிற்கு மேல் செயல்படாமல் இருந்த இந்த மையம், மாவட்ட கலெக்டர் மேற்பார்வையில், வேளாண்மை குழு, வேளாண் வணிக துறை, நீலகிரி விற்பனை குழு சார்பில், ஒழுங்குமுறை விற்பனை கூடமாக அறிவிக்கப்பட்டு கடந்த, 14ல் துவங்கப்பட்டு பூண்டு ஏலம் துவங்கியது.
முதல் ஏலத்தில், 46 விவசாயிகள், 6 வியாபாரிகள் பங்கேற்றனர். மொத்தம், 5,400 கிலோ பூண்டு ஏலத்திற்கு வந்தது. மொத்தம், 7 லட்சத்து 50 ஆயிரத்து 677 ரூபாய் வருவாய் கிடைத்தது. அதிகபட்ச விலையாக, 200 குறைந்தபட்ச விலையாக, 40 ரூபாய் கிடைத்தது. சராசரி விலை, 140 ரூபாய் என இருந்தது. 2வது ஏலத்தில், அதிகபட்சமாக, 135 ரூபாய்க்கு ஏலம் போனது. விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த மையத்தில் மற்ற மலைகாய்கறிகளையும் ஏலம் விட விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், 'வேளாண் விற்பனை வணிக துறையின் கீழ், செயல்படுத்தப்படும் ஏல சந்தையை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். மாவட்ட உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்புகளை ஒருங்கிணைத்து மேம்படுத்திய உற்பத்தி திறனை நடைமுறைபடுத்தி, சந்தைப்படுத்துதலில் போட்டி தன்மையை மேம்படுத்த வேண்டும்.
விவசாய விதை விதைத்தல் முதல் சந்தைப்படுத்துதல் வரை விவசாயம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு வங்கிகளின் ஆதரவுடன் பரிவர்த்தனை வசதிகள் செய்து தர வேண்டும். மேட்டுப்பாளையத்திற்கு இணையாக, மலை காய்கறி ஏலத்தையும் இங்கு செயல்படுத்த வேண்டும்,'என்றனர்.
வேளாண் விற்பனை துறை துணை இயக்குனர் கண்ணாமணி கூறுகையில், ''இங்கு, 500 மெட்ரிக்டன் சேமித்து வைக்க இடவசதி உள்ளதால், விவசாயிகள் பொருட்களை கொண்டு வந்து பாதுகாத்து ஏலம் விட வாய்ப்பாக உள்ளது. வரும் அக்., மாதம் வரையில் பூண்டு ஏலத்திற்கான கிராக்கி உள்ளது.
பல இடங்களில், மறைமுக ஏலம் விடப்படுவதால், வாங்குபவர்களுக்கு தேவையான பொருள் நேரடியாக விவசாயிகளிடம் எடுத்து கொள்வதால், நேரடி பயன்பாடு இருவருக்கும் கிடைக்கிறது. 'இ-நாம் ஆப்' வாயிலாகவும் ஏலம் எடுக்கலாம். மலை பகுதி விவசாயிகள் நலனை மேம்படுத்தவும், ஏலம் சிறப்பாக நடத்தவும் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது,'' என்றார்.