/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புதிய பாலத்தில் போக்குவரத்து துவங்கினால் பயன்
/
புதிய பாலத்தில் போக்குவரத்து துவங்கினால் பயன்
ADDED : பிப் 03, 2025 11:09 PM

கூடலுார்; 'முதுமலை, தெப்பக்காடு -- மசினகுடி சாலையில் மாயாறு ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள புதிய பாலத்தில், மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்தை துவக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு அருகே, மசினகுடி சாலையில் மாயாறு ஆற்றின் குறுக்கே, சேதமடைந்த பழைய பாலத்துக்கு மாற்றாக புதிய பாலம் கட்டும் பணி, 2022 ஜன., மாதம் துவங்கப்பட்டது. தெப்பக்காடு- மசினகுடி இடையே தற்காலிக போக்குவரத்துக்கு வனத்துறைக்கு சொந்தமான சாலையை பயன்படுத்தப்பட்டது.
தொடர்ந்து, பழைய பாலம் இடிக்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் புதிய பாலம் கட்டும் பணி ஓராண்டுக்கு மேலாக துவங்கப்படவில்லை. இதனால், உள்ளூர் மக்கள், ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்தனர். தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, நீலகிரி எம்.பி., ராஜா ஆகியோர், 2023 மார்ச் மாதம் பாலத்தை ஆய்வு செய்து, 'புதிய பாலம் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும்,' என, தெரிவித்தனர்.
தொடர்ந்து, புதிய பாலம் அமைக்கும் பணி துவக்கப்பட்டது. பணிகள் ஆமை வேகத்தில் நடந்தது. பருவமழை தீவிரமடைந்ததால், மாயார் ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கை தொடர்ந்து பணிகள் நிறுத்தப்பட்டன.
பருவமழைக்கு, பின் பணிகள் துவங்கப்பட்டது. தற்போது பாலத்தின் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ளது.
பாலத்தின் இருபுறமும் உள்ள சாலையில், சீரமைக்க வேண்டிய பணி மட்டும் நிலுவையில் உள்ளது. இப்பணிகளை விரைந்து முடித்து, பாலத்தில் போக்குவரத்து துவங்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர். ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் கூறுகையில்,' இப்பாலம் அமைக்கும் பணி கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வருகிறது. தற்போது பெரும்பாலான பணிகள் முடிந்துள்ளது. எனினும், சாலையின் இரு புறமும் சீரமைக்கப்படவில்லை. இப்பணிகளை உடனடியாக முடித்து, புதிய பாலம், வழியாக வாகனங்கள் இயக்க அனுமதிக்க வேண்டும்,' என்றனர்.