/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோடை சீசனில் நாள்தோறும் சிறப்பு ரயில்களை இயக்கினால் மகிழ்ச்சி! : பல கோடி ரூபாய் செலவு செய்தும் தயக்கம் ஏன்?
/
கோடை சீசனில் நாள்தோறும் சிறப்பு ரயில்களை இயக்கினால் மகிழ்ச்சி! : பல கோடி ரூபாய் செலவு செய்தும் தயக்கம் ஏன்?
கோடை சீசனில் நாள்தோறும் சிறப்பு ரயில்களை இயக்கினால் மகிழ்ச்சி! : பல கோடி ரூபாய் செலவு செய்தும் தயக்கம் ஏன்?
கோடை சீசனில் நாள்தோறும் சிறப்பு ரயில்களை இயக்கினால் மகிழ்ச்சி! : பல கோடி ரூபாய் செலவு செய்தும் தயக்கம் ஏன்?
ADDED : மார் 21, 2025 02:32 AM
குன்னுார்: நீலகிரியில், பல கோடி ரூபாய் செலவு செய்து மேம்பாட்டு பணிகள் நடத்தியும் கோடை சீசனில் தினமும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படாமல் உள்ளதால், மலை ரயில் ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
குன்னுாரில் இருந்து ஊட்டிக்கு தினமும், காலை, 7:45 மணி; பகல் 12:35 மணி மற்றும் மாலை 4:00 மணி; ஊட்டியில் இருந்து காலை, 9:15 மணி; பகல் 12:15 மணி மற்றும் மாலை 5:30 மணிக்கும் மலை ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதே போல, மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை, 7:10 மணிக்கு, 4 பெட்டிகளுடன் புறப்படும் மலை ரயில், குன்னுார் வந்ததும், கூடுதலாக ஒரு பெட்டி இணைத்து, 5 பெட்டிகளுடன், காலை, 10:40 மணிக்கு ஊட்டிக்கு செல்கிறது.
இந்த ரயில் ஊட்டியில் மதியம், 2:10 மணிக்கு புறப்பட்டு, மேட்டுப்பாளையத்திற்கு செல்கிறது. மலை ரயில்களில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள், ஆர்வம் காட்டுவதால், முன்பதிவு முறை அமலில் உள்ளது.
கோடையில் சிறப்பு ரயில்
பொதுவாக, கோடை சீசன் மற்றும் பண்டிகை, விழா காலங்களில் சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக இந்த ஆண்டு கோடை சீசனில், மார்ச் இறுதியில் இருந்து, ஜூலை, 7 வரை, வார இறுதி நாட்களில் மட்டும் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதில், வெள்ளி முதல் திங்கள் வரையிலான நாட்களில் ஒரு நாளைக்கு ஒரு 'டிரிப்' மட்டுமே இயக்கப்படுகிறது.
இந்நிலையில், ஊட்டிக்கு தினமும் சிறப்பு ரயில்கள் கூடுதலாக இயக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
வாய்ப்பு இருந்தும் பயனில்லை
ஓய்வு பெற்ற, மலை ரயில் ஊழியர்கள் சிலர் கூறியதாவது:
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், 'எக்ஸ் கிளாஸ்' நீராவி இன்ஜினில் இயக்கப்படும் மலை ரயிலில், ஊட்டி வரை பயணம் செய்யவே அதிகம் விரும்புகின்றனர். ஆனால், அதற்கான நடவடிக்கை இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
ஏற்கனவே, நுாற்றாண்டு பழமை வாய்ந்த, '37384' எண் கொண்ட நீராவி இன்ஜின் இயங்கும் நிலையில் இருந்தும் பயனில்லை. மேலும், இங்குள்ள அதிகாரிகளின் மெத்தனத்தால், மற்றொரு பழமையான இன்ஜின் இயக்கப்படாமல் மேட்டுப்பாளையம் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல, நமது நாட்டின் முதல் தயாரிப்பான, நிலக்கரி நீராவி இன்ஜினும் சோதனை ஓட்டத்துடன் முடித்து, மேட்டுப்பாளையத்தில் ஓராண்டிற்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது, குன்னுார்- ஊட்டி இடையே மலை ரயில்கள் இயக்க, 5 டீசல் இன்ஜின்களும்; குன்னுார்- மேட்டுப்பாளையம் இடையே இயக்க, 7 நீராவி இன்ஜின்களும் உள்ளன. 18 பிரேக்ஸ் மேன்கள், மற்றும் 14 டிரைவர்கள் உள்ளனர். காலி பணியிடங்களுக்கு வட மாநிலங்களில் இருந்து அதிகளவில் புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும் கூடுதல் மலை ரயில்கள் இயக்க தயக்கம் காட்டப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
மலை ரயில் ரத அறக்கட்டளை நிறுவன தலைவர் நடராஜ் கூறுகையில், '' கூடுதல் ரயில்கள் இயக்க ஏற்கனவே ரயில்வேயிடம் கோரிக்கை வைத்தும், சேலம் கோட்ட அலுவலகத்திலிருந்து எந்த பதிலும் வரவில்லை.
நடப்பாண்டு தினமும் சிறப்பு ரயில் இயக்க உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. நல்ல பதிலை எதிர்பார்த்து காத்துள்ளோம்,'' என்றார்.