ADDED : அக் 08, 2024 12:08 AM
குன்னுார் : குன்னுார் அரசு ஐ.டி.ஐ., விடுதியில் மாணவர்களுக்கு உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
குன்னுார் அரசு தொழில் பயிற்சி நிலையம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த ஆண்டு, 34.65 கோடி ரூபாய் மதிப்பில் 'டாடா டெக்னாலஜி' நிறுவன ஒப்பந்தத்துடன், அரசு 'இண்டஸ்ட்ரி-4.0' தொழில் நுட்ப மையத்தை துவக்கியது. இங்கு வழக்கத்தை விட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கடந்த மாதம், 13ம் தேதி வகுப்புகள் துவங்கிய நிலையில், 'இங்குள்ள விடுதி மாணவர்களுக்கு உரிய முறையில் உணவு வழங்கப்படுவதில்லை,' என, நேற்று பெற்றோர் சிலர் குற்றம் சாட்டினர்.
ஐ.டி.ஐ., முதல்வர் செல்வகுமார் கூறுகையில்,''இந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதல் மாணவர்கள் விடுதியில் சேர்ந்துள்ளனர்.
80 மாணவர்களுக்கான உணவுக்கு அரசு திட்டம் உள்ள நிலையில், மீதமுள்ள மாணவர்களுக்கு ஊட்டி ஐ.டி.ஐ., மற்றும் பிற்படுத்தப்பட்ட நலத்துறை உள்ளிட்ட விடுதிகளில் சேர்க்கைக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 7 நாட்களில், ஞாயிறு அன்று பலரும் வீட்டிற்கு செல்லும் நிலையில், அன்றைய உணவு ரத்து செய்தும், ஆசிரியர்களின் பங்களிப்புடன் கூடுதல் மாணவர்களுக்கான அளவீடு சரி செய்யப்பட்டு வருகிறது.
அரசு அனுமதி அளித்தவுடன், 10 நாட்களுக்குள் இதற்கு தீர்வு காணப்படும்,'' என்றார்.
எனவே, குன்னுார் அரசு ஐ.டி.ஐ., விடுதியில் மாணவர்களுக்கு உணவு வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
