ADDED : ஆக 31, 2026 06:42 PM
நீலகிரியில் உற்பத்தி செலவு அடிப்படையில் தேயிலைக்கு...
விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க வலியுறுத்தல்
குன்னுார்: ‘நீலகிரியில் உற்பத்தியாகும் பசுந்தேயிலைக்கு உற்பத்தி செலவு அடிப்படையில் குறைந்தபட்ச விலை நிர்ணயிக்க வேண்டும்,’ என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் வாரந்தோறும் நடக்கும் தேயிலை துாள் ஏலத்தின் அடிப்படையில் பசுந்தேயிலைக்கு மாதாந்திர விலை நிர்ணயம் செய்து விவசாயிகள் வழங்கும் பசுந்தேயிலைக்கான தொகையை தொழிற்சாலைகள் வழங்குகின்றனர். கடந்த, 2021ம் ஆண்டின் சந்தை கட்டுப்பாட்டு திருத்த ஆணை விவசாயிகளின் சாகுபடி செலவுக்கு முழு உத்தரவாதம் அளிக்காததாலும், இடைத்தரகர்கள் ஆதிக்கம், ‘படிவம்–-இ’ விவரங்களை வெளிப்படை தன்மை மற்றும் தேயிலை துாளாக மாறும் விகித கணக்கீட்டு குறைபாடுகளாலும் விவசாயிகள் உரிய விலையின்றி பாதிக்கப்படுகின்றனர்.
தற்போதைய பசுந்தேயிலை உற்பத்தி செலவுக்கு ஏற்ப, குறைந்தபட்ச நிலையான பசுந்தேயிலை விலை மற்றும், ‘65:35’ என்கின்ற விகிதாச்சார அடிப்படையில் விலை பகிர்வு சூத்திரத்தை கூடுதல் பலனாக வழங்க வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இது குறுறித்து குன்னுாரில், தேயிலை வாரிய செயல் இயக்குனரிடம் மனு அளித்த, நீலகிரி சிறு தேயிலை விவசாயிகள் விழிப்புணர்வு மைய ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது:
கடந்த, 2013ல் பசுந்தேயிலை உற்பத்தி செலவு கிலோவுக்கு, 14 ருபாய் என இருந்த நிலையில், பி.டி.ஓ., நிறுவன ஆய்வறிக்கையின்படி சாகுபடி செலவு, 21 முதல் 23 ரூபாய்; தொழிற்சாலை பதப்படுத்தும் செலவு, 47 முதல் 49 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
எனவே, 13 ஆண்டுகளுக்கு முந்தைய கணக்கீட்டை மாற்றியமைத்து, விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாதவாறு, உற்பத்தி செலவை ஈடுசெய்யும், குறைந்தபட்ச கொள்முதல் விலையை முதற்கட்டமாகவும், தேயிலை விற்பனையின் கூடுதல் லாபத்தில், 65: 35 என்ற விகிதாச்சார பங்கு விகிதத்தை இரண்டாம் கட்டமாகவும் வழங்கும் இரு அடுக்கு விலை பாதுகாப்பு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேலும், கொள்முதல் முகவர்கள் முதல் இறுதி பண பட்டுவாடா வரையிலான ஒட்டுமொத்த சங்கிலியையும் தேயிலை வாரியம் வெளிப்படையாக கண்காணிக்க வேண்டும். நீலகிரியில் பசுந்தேயிலைக்கு உற்பத்தி செலவு அடிப்படையில் குறைந்தபட்ச விலை நிர்ணயிக்க வேண்டும். இதற்கு பிரத்யேக சாகுபடி செலவு குறித்து ஆய்வை மேற்கொண்டு, புதிய கொள்முதல் விலையை மத்திய வர்த்தக அமைச்சகத்தின் ஒப்புதலுடன் தொடர்ச்சியாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு, வேணுகோபால் கூறினார்.
