/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோடநாடு கொலை வழக்கு: நவ., 29க்கு ஒத்திவைப்பு
/
கோடநாடு கொலை வழக்கு: நவ., 29க்கு ஒத்திவைப்பு
ADDED : அக் 26, 2024 06:48 AM
ஊட்டி: கோத்தகிரி, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை, நவ., 29ம் தேதிக்கு ஒத்திவைத்து, நீதிபதி உத்தரவிட்டார்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு, மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல்காதர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டதால், குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று, இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் கோர்ட்டில் நேரில் ஆஜராகினர்.
அரசு தரப்பு வக்கீல்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோரும் ஆஜராகினர். மேலும், சி.பி.சி.ஐ.டி., - ஏ.டி.எஸ்.பி., முருகவேல் மற்றும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் வருகை புரிந்தனர்.
குடும்ப நல நீதிமன்ற நீதிபதி லிங்கம் முன்னிலையில், வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தற்போது, இன்டர்போல் விசாரணை நடந்து வருவது குறித்தும்; புலன் விசாரணை மற்றும் சாட்சிகளிடம் விசாரித்து வருவது குறித்தும், அரசு தரப்பு வக்கீல்கள் நீதிபதியிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து, விசாரணையை, நவ., 29க்கு ஒத்திவைத்து, நீதிபதி உத்தரவிட்டார்.
அரசு வக்கீல் ஷாஜகான் கூறுகையில், ''கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்டர்போல் விசாரணையும் நடந்து வருகிறது. இது குறித்து நீதிபதியிடம் தெரிவித்ததை அடுத்து, நவ., 29க்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்,'' என்றார்.
சஜீவனுக்கு சம்மன்
கோடநாடு பங்களாவில் உள்ள, பீரோ போன்ற மரவேலைகளை செய்து வந்த சஜீவனை, நவ., 5ம் தேதி கோவை சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக, சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.