/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குந்தா அணையை தற்போது துார் வார வேண்டியது... காலத்தின் கட்டாயம்!தேக்கி வைக்கும் தண்ணீரை வறட்சியில் பயன்படுத்தலாம்
/
குந்தா அணையை தற்போது துார் வார வேண்டியது... காலத்தின் கட்டாயம்!தேக்கி வைக்கும் தண்ணீரை வறட்சியில் பயன்படுத்தலாம்
குந்தா அணையை தற்போது துார் வார வேண்டியது... காலத்தின் கட்டாயம்!தேக்கி வைக்கும் தண்ணீரை வறட்சியில் பயன்படுத்தலாம்
குந்தா அணையை தற்போது துார் வார வேண்டியது... காலத்தின் கட்டாயம்!தேக்கி வைக்கும் தண்ணீரை வறட்சியில் பயன்படுத்தலாம்
ADDED : மே 05, 2024 11:34 PM

ஊட்டி;'மஞ்சூர் குந்தா அணையில் விரைவில் ஆய்வு மேற்கொண்டு துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், 'முக்கூர்த்தி, பைக்காரா, சாண்டிநல்லா, கிளன்மார்கன், மாயார், அப்பர்பவானி, பார்சன்ஸ்வேலி, போர்த்திமந்து, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை, பில்லுார்,' ஆகிய, 13 அணைகள் உள்ளன. இந்த அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மூலம் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.
அதில், குந்தா வட்டத்தில், 'குந்தா, கெத்தை, பரளி, பில்லுார், அவலாஞ்சி, காட்டுக்குப்பை,' என, 6 மின்நிலையங்கள் உள்ளன.
பைக்காரா மின் வட்டத்தில், முக்கூர்த்தி நுண் புனல் மின் நிலையம், பைக்காரா நுண்புனல் மின்நிலையம், சிங்காரா மின்நிலையம், மாயார், மரவகண்டி நுண் புனல் நிலையம், பைக்காரா இறுதி நிலை புனல் மின் நிலையம்,' என, 6 மின் நிலையங்கள் உள்ளன. மொத்தம், 12 மின்நிலையங்களில், தினசரி 833.65 மெகாவாட் மின்உற்பத்தி மேற்கொள்ள முடியும்.
துார் வாருவது எப்போது
குந்தா வட்டத்தில், 89 அடி கொண்ட குந்தா அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மூலம், 'கெத்தை, 175 மெகாவாட்; பரளி, 180; பில்லுார், 100 மெகாவாட்,' என, மொத்தம், 455 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பருவ மழையின் போது அணை நிரம்பி வெளியேறும் உபரி நீர் பெரும்பள்ளம் வழியாக பில்லுார் அணைக்கு சென்று, மேட்டுப்பாளையம் வழியாக பவானி அணையில் கலக்கிறது. அங்கு பல்லாயிரம் ஏக்கர் பாசன விவசாயத்திற்கு உதவுகிறது. இவ்வாறு, 'மின் உற்பத்தி; பாசனத்துக்கு பயன்படும் முக்கியத்துவம் வாய்ந்த குந்தா அணையை துார் வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது.
கமிஷன் காரணமா...?
இதை தொடர்ந்து, நீலகிரியில் உள்ள அணைகள், மின்நிலையங்களில் பராமரிப்பு பணிக்கு கடந்த, 10 ஆண்டுக்கு முன்பு உலக வங்கி நிதியுதவி அளித்துள்ளது. மாவட்டத்தில் பிற அணைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், குந்தா அணையில் பாதி அளவுக்கு சேர்ந்துள்ள சகதி, புதர் செடிகளின் அளவு அதிகரித்து வருகிறது.
இதை முழுமையாக தூர்வார கடந்த, 10 ஆண்டு கால இடைவெளியில், 5 முறை டெண்டர் கோரப்பட்ட நிலையில், ஏதோ ஒரு காரணத்துக்காக, அடுத்தடுத்து டெண்டர் ரத்து செய்யப்பட்டு வருவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
'டெண்டரின் போது, கமிஷன் படியாத காரணத்தால், ஒவ்வொரு ஆட்சியிலும் சில அரசியல்வாதிகளால் இப்பணிகள் கிடப்பில் போடப்படுகிறது,' என்பது, விபரம் அறிந்த மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
துார்வாரும் பணிகள் நடந்து முடிந்தால், வறட்சி காலங்களில் அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மின் உற்பத்திக்கு பயன்படுத்தியபின், மக்களின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்த போதுமானதாக இருக்கும்.
ஆனால், அதற்கான நடவடிக்கையை இதுவரை மேற்கொள்ளவில்லை.மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்,' குந்தா அணையிலிருந்து அகற்றப்படும் சேறும், சகதிகளை கொட்டுவதற்கு இடம் வசதி இல்லை.
மின்வாரியத்திற்கு சொந்தமான ஒரு இடத்தை தேர்வு செய்தோம். 'அது சதுப்புநிலம்' என, பொது நல அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் துார்வார முடியாத நிலை உள்ளது.
உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அணை துார்வார தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,' என்றனர்.