/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொழிலாளர் பற்றாக்குறை: பசுந்தேயிலை பறிப்பதில் சிக்கல்
/
தொழிலாளர் பற்றாக்குறை: பசுந்தேயிலை பறிப்பதில் சிக்கல்
தொழிலாளர் பற்றாக்குறை: பசுந்தேயிலை பறிப்பதில் சிக்கல்
தொழிலாளர் பற்றாக்குறை: பசுந்தேயிலை பறிப்பதில் சிக்கல்
ADDED : டிச 19, 2024 11:21 PM

கோத்தகிரி; கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பசுந்தேயிலை மகசூல் அதிகரித்தும், தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக, அறுவடை செய்ய முடியாமல், பனியில் கருகும் சூழல் உள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளன.
நீலகிரி மாவட்டத்தில், தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. இத்தொழிலை நம்பி, 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு விவசாயிகள், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். தற்போது, ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு, 20 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. உரம், பூச்சிக்கொல்லி மருந்து உட்பட, இடுபொருட்களின் விலையேற்றம், தோட்ட பராமரிப்பு செலவு மற்றும் தொழிலாளர்களின் கூலி உயர்வு உள்ளிட்ட செலவினங்கள் அதிகமாக உள்ளதால், இந்த விலை, விவசாயிகளுக்கு கட்டுப்படியானதாக இல்லை.
இருப்பினும், விவசாயிகள் ஓரளவு ஆறுதல் அடைந்து தோட்டங்களை பராமரித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக, பரவலாக மழை பெய்த நிலையில், தோட்டங்களுக்கு விவசாயிகள் உரமிட்டுள்ளனர். இதனால், பெரும்பாலான தோட்டங்களில் பசுந்தேயிலை மகசூல் அதிகரித்து வருகிறது. கடந்த நான்கு நாட்களாக, வெயிலான காலநிலை தென்படுவதால், பசுந்தேயிலையை அறுவடை செய்ய ஏதுவான சூழல் நிலவுகிறது.
இருப்பினும், தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக, தயாரான பசுந்தேயிலையை பறிக்க முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க, பகல் நேரங்களில் கடுமையான வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் நீர் பனிப்பொழிவு நிலவுவதால், எதிர்வரும் நாட்களில், தாழ்வான பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில், உறை பனியின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதனால், பசுந்தேயிலை கருகும் அபாயம் உள்ளதால், பனிதாக்கக்கூடிய தேயிலை தோட்டங்களின் மேல், தாகை உள்ளிட்ட செடிகளை மூடி பாதுகாத்து வருகின்றனர்.