நிலச்சரிவு அபாய பகுதிகள்: புவியியல் துறையினர் ஆய்வு
நிலச்சரிவு அபாய பகுதிகள்: புவியியல் துறையினர் ஆய்வு
UPDATED : நவ 17, 2026 05:31 PM
ADDED : நவ 17, 2026 05:27 PM

குன்னுார்: குன்னுார் உள்ள நிலச்சரிவு அபாய பகுதிகளில், இந்திய புவியியல் ஆய்வு துறை அதிகாரிகள் கள ஆய்வு செய்தனர்.
இந்திய புவியியல் ஆய்வு துறை சார்பில், மலையில் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளை வகைப்படுத்த,‘மேக்ரோ மற்றும் மீசோ’ எனப்படும் முறையில் ஆய்வுகள் நடந்து வருகின்றன. அதில், குறிப்பிட்ட பகுதிகளை வரைபடமாக்குவது. மலையில் உள்ள அபாயகரமான சரிவுகள், மண்ணரிப்பு மற்றும் நிலச்சரிவுகளை தடுப்பதற்கான தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள், பாதுகாப்பு நடவடிக்கைகளை, மாவட்ட மற்றும் மாநில நிர்வாகங்களுக்கு அறிவியல் பூர்வமாக பரிந்துரை செய்வது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், நடப்பாண்டில் கடந்த மாதம், 23ல் பெய்த கனமழையால் குன்னுார் பர்லியாரில் ஒரே நாளில், 25 செ.மீ., மழையளவு பதிவாகி நிலச்சரிவு மற்றும் மண்சரிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, இந்திய புவியியல் ஆய்வு துறையின் சார்பில், அதிகாரிகளான மகேஷ்குமார், அபிஷேக் ஆகியோர், குன்னுார் சுற்றுவட்டார பகுதிகளில் நேரில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், மலை பகுதிகளில் உள்ள மண்ணரிப்பு பகுதிகள், பலவீனமான சரிவுகள் மற்றும் ஆபத்தான இடங்களை ஆய்வு செய்து புவியியல் தரவுகளை சேகரித்தனர்.
குறிப்பாக, குன்னுார் சின்ன வண்டிச்சோலை, காமராஜ புரம் இந்திரா நகர், கேத்தி பகுதியில் ஆய்வு செய்த இந்த குழுவினர், நீர் செல்லும் இடங்களில் தடுப்பு அமைக்க வேண்டிய பகுதி, விழும் அபாயகரமான பாறைகள் குறித்து ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து, ஊட்டி, கூடலூர் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இந்த ஆய்வு குறித்து தொழிற்நுட்ப தகவல்களை அவர்கள் தெரிவிக்கவில்லை.
உள்ளூர் அதிகாரிகள் கூறுகையில்,‘குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகள், 66 இடங்களில் இந்த குழுவினர் ஆய்வு நடந்தது. இதன் அறிக்கை அவர்கள் நேரடியாக அரசிடம் வழங்குவர். இதன் அடிப்படையில், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பேரிடர்களை தவிர்க்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.
