/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாமழை போற்றுவோம்: நனவாகும் மின்சார கனவு; பெருகட்டும் விவசாய உற்பத்தி
/
மாமழை போற்றுவோம்: நனவாகும் மின்சார கனவு; பெருகட்டும் விவசாய உற்பத்தி
மாமழை போற்றுவோம்: நனவாகும் மின்சார கனவு; பெருகட்டும் விவசாய உற்பத்தி
மாமழை போற்றுவோம்: நனவாகும் மின்சார கனவு; பெருகட்டும் விவசாய உற்பத்தி
ADDED : ஆக 06, 2025 08:54 PM

-நிருபர் குழு--
நீலகிரி மாவட்டத்தில் குந்தா, பைக்காரா மின் வட்டத்தின் கீழ், குந்தா, கெத்தை, அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பார்சன்ஸ்வேலி, போர்த்திமந்து, பைக்காரா, கிளன்மார்கன், மாயார், முக்குறுத்தி உட்பட 13 அணைகள் , 12 மின் நிலையங்கள் உள்ளன.
தமிழகத்தில் அதிகளவில் நீர் மின் உற்பத்தி நீலகிரியில் தான் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ஈரோடு, மதுரை, சென்னை ஆகிய மின் வினியோக மையப்பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள மாவட்டங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. 12 மின் நிலையங்களில், 33 பிரிவுகளில், தினமும், 833.65 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது.
முன்கூட்டியே வந்த மழை நடப்பாண்டில் தென் மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்கி கடந்த இரண்டு மாதங்களாக பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான அவலாஞ்சி, அப்பர்பவானி, பைக்காரா, பார்சன்ஸ்வேலி பகுதிகளில் மழை பொழிவு அதிகரித்து நீரோடைகளில் வழக்கத்தை விட தண்ணீர் வரத்து அதிகரித்தது. தற்போது, 13 அணைகளில் தண்ணீர் இருப்பு முழு கொள்ளளவில் உள்ளன. மின் உற்பத்தியும் தேவைக்கேற்ப உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
பவானி விவசாயிகளுக்கு பாசனம் இங்குள்ள அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் வாயிலாக மின் உற்பத்தி ஒருபுறம் நடந்தாலும், அணைகள் நிரம்பி வெளியேற்றப்படும் உபரி நீரால் ஈரோடு, பவானி உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில் பல ஆயிரம் ஏக்கர் பாசன விவசாயத்திற்கு பயன்படுகிறது.
மின் உற்பத்தி, கூட்டு குடிநீர் திட்டத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் கெத்தை, குந்தா, எமரால்டு, அவலாஞ்சி, அப்பர்பவானி, பைக்காரா உள்ளிட்ட அணைகள் துார்வாரி பல ஆண்டுகள் ஆனதால் சேறும், சகதியும் அதிகரித்து தண்ணீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மின் வாரியம் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு பிரத்யேக திட்டத்தை வகுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குந்தா மேற்பார்வை செயற்பொறியாளர் பிரேம்குமார் கூறுகையில்,'' ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை அந்தந்த பருவத்தில் துவங்குவதற்கு முன்பாகவே, அணைகள், மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது அணைகளில் தண்ணீர் உள்ளதால் தடையில்லாமல் மின் உற்பத்தி நடந்து வருகிறது. கோடை காலத்தில் அணைகள் துார்வாருவது குறித்து மேலதிகாரிகளுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.