/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அழிந்து வரும் நீலகிரி வரையாடுகளை பாதுகாப்போம்! பழங்குடியின மக்களிடம் விழிப்புணர்வு
/
அழிந்து வரும் நீலகிரி வரையாடுகளை பாதுகாப்போம்! பழங்குடியின மக்களிடம் விழிப்புணர்வு
அழிந்து வரும் நீலகிரி வரையாடுகளை பாதுகாப்போம்! பழங்குடியின மக்களிடம் விழிப்புணர்வு
அழிந்து வரும் நீலகிரி வரையாடுகளை பாதுகாப்போம்! பழங்குடியின மக்களிடம் விழிப்புணர்வு
ADDED : ஏப் 11, 2025 10:39 PM

பொள்ளாச்சி; நீலகிரி வரையாடுகளை பாதுகாப்பது நமது கடமை, என, பழங்குடியின மக்களிடம் வரையாடு பாதுகாப்பு திட்ட அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில், மாநில விலங்காக நீலகிரி வரையாடு உள்ளது. பொள்ளாச்சி - வால்பாறை ரோடு, கிராஸ்ஹில்ஸ் உள்ளிட்ட வனப்பகுதிகளில் இதன் நடமாட்டத்தை காண முடிகிறது. ரோட்டோரம் கூட்டமாக நிற்கும் வரையாடுகள் பார்வைக்கு விருந்தளிக்கின்றன.
மாநில விலங்கு என்ற கவுரவம் இருந்தாலும், இதன் எண்ணிக்கை சமீப ஆண்டுகளில் வெகுவாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழக அரசு, 25 கோடி ரூபாயில், நீலகிரி வரையாடுகள் பாதுகாப்பு திட்டத்தை கடந்தாண்டு துவக்கியது.
ஐந்தாண்டு திட்டமாக உள்ள இக்குழு வாயிலாக, பணிகளை மேற்கொள்ளப்பட உள்ளது. மற்ற விலங்குகள் குறித்த விபரங்கள் உள்ள நிலையில், வனத்துறை வாயிலாக நீலகிரி வரையாடுகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்படுகிறது.
வரையாடுகள் ஆங்காங்கே தென்பட்டாலும், அதிகமாக உள்ள பகுதி முக்கூர்த்தி தேசிய வனப்பூங்கா மற்றும் வால்பாறை கிராஸ்ஹில்ஸ் பகுதியாகும். இப்பகுதிகளில் வரையாடுகள் குறித்து கள ஆய்வுகள் செய்து அவற்றை பாதுகாக்கவும, அவற்றின் வாழ்விடத்தை பாதுகாக்கவும் என்ன செய்யலாம் என திட்டமிடப்படுகிறது. அதை தொடர்ந்து, நீலகிரி வரையாடு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
மாவடப்பு, காடம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களை நேரடியாக சந்தித்து, நீலகிரி வரையாடு திட்ட உதவி இயக்குனர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார்.
நீலகிரி வரையாடு திட்ட உதவி இயக்குனர் கணேஷ்ராம் கூறியதாவது:
அரேபியன் தார், இமயமலையில் உள்ள வரையாடுகள், நீலகிரி தார் என மூன்று விதமாக உள்ளன. அதில், தமிழகத்தின் மாநில விலங்காக உள்ள நீலகிரி வரையாடுகளை பாதுகாக்க அரசு முயற்சிகளை எடுத்துள்ளது.
அதை தொடர்ந்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அதை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டியது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, மாவடப்பு, காடம்பாறை உள்ளிட்ட பழங்குடியின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு நேரடியாக சென்று, நீலகிரி வரையாடுகள் பாதுகாப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அதில், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட நீராறு அணை, சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு, மேல் ஆழியாறு, காடம்பாறை, திருமூர்த்தி, அமராவதி அணைகள் வாயிலாக சேகரமாகும் நீர், கோவை, திருப்பூர், கரூர் போன்ற மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகம், சோலைக்காடுகள், புல்மலைகள் அடங்கியுள்ளது. இப்புல் மலைகளில் வாழும் ஒரே வனவிலங்கு வரையாடு தான். மேய்ச்சல் வாயிலாக மழையானது வீணாகாமல் புல்வெளியில் சேகரம் செய்யப்படுகிறது.
புல்வெளி பரப்பளவினை தனது எச்சத்தின் வாயிலாக விரிவுப்படுத்துகிறது. மேலும், பண்டைய காலத்தில் லட்சக்கணக்கில் வாழ்ந்ததாக சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட நீலகிரி வரையாடானது, கடந்தாண்டு கணக்கெடுப்பின்படி, 1,031 மட்டுமே உள்ளது.
எண்ணிக்கையில் குறைந்து வரும், மாநில விலங்கான நீலகிரி வரையாட்டினை பேணி பாதுகாக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
வேட்டையாடுதல், காட்டுத்தீ போன்ற பிரச்னைகளால் நீலகிரி வரையாடுகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனவே, வரையாடுகளை பாதுகாக்க அனைவரும் கை கோர்க்க வேண்டும். காட்டுத்தீ பரவுவதை கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வரையாடுகளை பாதுகாப்போம்; இயற்கையை காப்போம் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.