/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மது பிரியர்கள் டாஸ்மாக்கிற்கு வாரி கொடுத்தது ரூ.500 கோடி! விற்பனையை மேலும் அதிகரிக்க வாய்மொழி உத்தரவு
/
மது பிரியர்கள் டாஸ்மாக்கிற்கு வாரி கொடுத்தது ரூ.500 கோடி! விற்பனையை மேலும் அதிகரிக்க வாய்மொழி உத்தரவு
மது பிரியர்கள் டாஸ்மாக்கிற்கு வாரி கொடுத்தது ரூ.500 கோடி! விற்பனையை மேலும் அதிகரிக்க வாய்மொழி உத்தரவு
மது பிரியர்கள் டாஸ்மாக்கிற்கு வாரி கொடுத்தது ரூ.500 கோடி! விற்பனையை மேலும் அதிகரிக்க வாய்மொழி உத்தரவு
ADDED : ஜன 31, 2024 10:17 PM

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில், 'டாஸ்மாக்' மது கடைகளில் கடந்த ஓராண்டில், 500 கோடி ரூபாய்க்கு மது வகைகள் விற்பனையாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, குந்தா, கூடலுார், பந்தலுார் ஆகிய, 6 தாலுக்காவில், 73 டாஸ்மாக் மது கடைகள் செயல்பட்டு வருகின்றன. டாஸ்மாக் கடைகளில், பிராந்தி, விஸ்கி, பீர் என, 19 வகையான மதுவகைகள் விற்கப்பட்டு வருகிறது. 12:00 மணிக்கு திறக்கப்படும் கடை, இரவு, 10:00 மணிவரை செயல்படுகிறது.
அதில், 80 சதவீத கடைகள் எப்போதும் பிசியாக இருக்கும். 'பார்' வசதியில்லாததால் மதுவகைகளை வாங்க வரும் மதுபிரியர்கள் மது கடைகள் முன்பாவும், பொது இடங்கள் மற்றும் சாலையோரங்களில அமர்ந்து மது குடிப்பதால் பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர்.
மது பாட்டில்களை திருப்பி கொடுத்தால், 10 ரூபாய் திரும்ப கிடைத்தும் கூட, சிலர் மது பாட்டில்களை கண்ட இடத்தில் வீசி எறிந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றனர்.
அடிமையாகும் இளைஞர்கள்
மலை மாவட்டத்தில், நாள்தோறும் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பாகவே, பல மது பிரியர்கள் கடைக்கு முன்பாக காத்திருக்கின்றனர். இம்மாவட்டத்தில், '25 வயது முதல், 35 வயது வரையுள்ள, 40 சதவீதம் இளைஞர்கள் மதுபோதைக்கு அடிமையாகி உள்ளனர்,' என, சில ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
மதுபோதைக்கு அடிமையான பலர் பல்வேறு நோய் தாக்கி உயிரிழந்த பரிதாப நிலையும் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. 'மதுவுக்கு அடிமையானவர்களை திருத்த உறவினர்கள் பல்வேறு சிகிச்சைக்கு அழைத்து சென்றாலும், மீண்டவர்களின் எண்ணிக்கை ஒரு சதவீதம் தான்,' என, தெரிய வந்துள்ளது.
ரூ. 500 கோடி வசூல்
இங்குள்ள டாஸ்மாக் மதுகடைகளில் தினமும் சராசரியாக, 1.50 கோடி ரூபாய்க்கு விற்பனையாகிறது. 'தீபாவளி புத்தாண்டு கொண்டாட்டம்,' என, முக்கிய பண்டிகைகளில், 1.70 கோடி ரூபாய்க்கு மது வகைகள் விற்பனையாகி வருகின்றன. மாதத்துக்கு சராசரியாக, 40 முதல் 45 கோடி ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது.
அதன்படி, கடந்தாண்டு ஜன., மாதம் முதல் டிச., மாதம் வரை, 500 கோடி ரூபாய் வரை மது வகைகள் விற்பனையாகியுள்ளது. கடந்த, 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளை காட்டிலும், 20 கோடி ரூபாய்க்கு விற்பனை அதிகரித்துள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,'நீலகிரியை பொறுத்தவரை ஆரம்பத்தில், 150 டாஸ்மாக் மது கடைகள் செயல்பட்ட நிலையில், தற்போது, 73 கடைகள் செயல்பட்டு வருகிறது. கடைகளை குறைத்தாலும், விற்பனை அதிகரித்து வருகிறது.
தமிழக அளவில் டாஸ்மாக் விற்பனையில் நீலகிரி, 2வது இடம் என, புள்ளி விபரம் தெரிவிக்கிறது. இந்நிலையில், அரசின் உத்தரவுபடி, 'மது விற்பனையை மேலும் அதிகரிக்க வேண்டும்,' என, மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் வாய்மொழி உத்தரவிட்டுள்ளனர்,' என்றனர்.