/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பீகாரிலிருந்து வந்த தாய் செடிகள் வாயிலாக அரசு பண்ணையில் லிச்சி செடி உற்பத்தி
/
பீகாரிலிருந்து வந்த தாய் செடிகள் வாயிலாக அரசு பண்ணையில் லிச்சி செடி உற்பத்தி
பீகாரிலிருந்து வந்த தாய் செடிகள் வாயிலாக அரசு பண்ணையில் லிச்சி செடி உற்பத்தி
பீகாரிலிருந்து வந்த தாய் செடிகள் வாயிலாக அரசு பண்ணையில் லிச்சி செடி உற்பத்தி
ADDED : நவ 03, 2025 11:32 PM

கூடலூர்:  கூடலூர், தோட்டக்கலை பண்ணையில், பீகாரிலிருந்து எடுத்துவரப்பட்ட தாய் செடிகள் மூலம் லிச்சி நாற்றுகள் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில், குறிப்பாக நீலகிரி  போன்ற மலை பிரதேசங்களில் உற்பத்தியாகும் பழங்கள் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. சீசன் காலங்களில், அந்தந்த பழங்களை சாப்பிடுவதன் மூலம் நோய்கள் வராமல் தடுக்க முடியும்.
அதன்படி நீலகிரி மாவட்டத்தில் விளையக் கூடிய பல வகை பழங்கள் நோய்களை தீர்க்கும் தன்மையை கொண்டுள்ளது. இங்கு விளையும் பழங்களைத் தவிர இந்தியாவில் மற்ற பகுதிகளில் விளையக்கூடிய பழ செடிகளையும் எடுத்து வந்து, இங்கு நடவு செய்து, பயனடைந்து வருகின்றனர்.
அதன்படி, ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருப்பது, நோய் தடுப்புக்கு பயன்படக்கூடிய லிச்சி செடிகளை கூடலூரில் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு வழங்கி வருவாயை மேம்படுத்தும் முயற்சியை தோட்டக்கலை துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
இதற்காக, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் பீகார் மாநிலத்தில் உள்ள தேசிய லிச்சி ஆராய்ச்சி நிலையத்திலிருந்து, 20 வகையான 600 லிச்சி தாய் செடிகளை ரயில் மற்றும் லாரிகள் மூலம் கூடலூர் எடுத்து வந்து பொன்னூர் தோட்டக்கலை பண்ணையில் தனியிடம் ஒதுக்கி, தாய் செடிகளை நடவு செய்து, பாதுகாப்பாக வளர்த்து வருகின்றனர்.
இதிலிருந்து, லிச்சி நாற்றுகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளனர்.
தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் 'லிச்சி பழங்கள் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில், மிகக் குறைந்த அளவு மட்டுமே இவை உற்பத்தி செய்யப்படுகிறது. கூடலூரில் இச்செடிகள் உற்பத்தி செய்வதற்கான காலநிலை உள்ளதால், பீகாரில் உள்ள தேசிய லிச்சி ஆராய்ச்சி நிலையத்தில் தாய் செடிகள், எடுத்துவரப்பட்டு நடவு செய்து பராமரித்து வருகிறோம்.
4 ஆண்டுகளுக்குப் பின் இந்த செடிகளில் இருந்து, நாற்றுகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளோம்.
ஊடுபயிராக இதனை விளைவிப்பது மூலம்  விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்' என்றார்.

