/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நெடுஞ்சாலை பணியாளர்கள் குறைவால் பராமரிப்பு பணிகள் பாதிப்பு! மலை மாவட்டத்தில் 120 மட்டுமே உள்ளதால் திணறல்
/
நெடுஞ்சாலை பணியாளர்கள் குறைவால் பராமரிப்பு பணிகள் பாதிப்பு! மலை மாவட்டத்தில் 120 மட்டுமே உள்ளதால் திணறல்
நெடுஞ்சாலை பணியாளர்கள் குறைவால் பராமரிப்பு பணிகள் பாதிப்பு! மலை மாவட்டத்தில் 120 மட்டுமே உள்ளதால் திணறல்
நெடுஞ்சாலை பணியாளர்கள் குறைவால் பராமரிப்பு பணிகள் பாதிப்பு! மலை மாவட்டத்தில் 120 மட்டுமே உள்ளதால் திணறல்
ADDED : நவ 13, 2025 08:22 PM

தமிழகத்தில் கடந்த, 1997ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியின்போது, நெடுஞ்சாலை பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். 'சாலையில் உள்ள குழிகளை தார் ஊற்றி சீரமைப்பது; முட்புதர்களை அகற்றுவது; சாலையோர மரங்களில் வண்ணம் பூசுவது; சாலையின் நடுவில் கோடுகள் வரைவது, வழிகாட்டும் மைல் கற்கள் அமைப்பது, மழை காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்காமல் பாதுகாப்பது,' உள்ளிட்ட சாலை சீரமைப்பு தொடர்பான பணிகளை மேற்கொள்ள இவர்கள் பணியில் நியமிக்கப்பட்டனர்.
41 மாதங்கள் பணியில்லை இதனால், சாலைகளில் ஏற்படும் குறைகள் உடனுக்குடன் சரி செய்யப்பட்டது. தொடர்ந்து, 2001ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் போது, 41 மாதங்கள் இவர்களுக்கு பணி மறுக்கப்பட்ட நிலையில்,பாதிக்கப்பட்ட பணியாளர்கள் நீதிமன்றத்தை நாடினர். 2006ல் தேர்தல் நடந்தபோது, வழக்கு வாபஸ் பெறப்பட்டு, மீண்டும் பணி வழங்கப்பட்டது.
அதன்பின், நீலகிரி மாவட்டம் முழுவதும், 242 பணியாளர்கள் இருந்த நிலையில், பணி ஓய்வு காரணமாக விடுவிக்கப்பட்டவர்களை தவிர, தற்போது, 120 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். அதிலும் குறிப்பாக அதிகளவில், தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களின் இணைப்பு சாலைகளை கொண்ட, கூடலுார் கோட்டத்தில், 72 பேர் பணியாற்றி வந்த நிலையில் தற்போது, 32 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.
அதில், கூடலுார் மற்றும் மசினகுடி பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ஓய்வு விடுதிகளில், 14 பேர் பணியாற்றி வரும் நிலையில், 18 பேர் மட்டுமே சாலை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிக்கல் இந்நிலையில், தற்போது, ஓய்வு பெறும் நிலையில் அதிகளவில் பணி யாளர்கள் உள்ளதால், இவர்களின் எண்ணிக்கை மேலும் குறையும் நிலை உள்ளது. இதனால், சுற்றுலா மையங்கள் உள்ள குன்னுார், ஊட்டி உட்பட மாவட்டம் முழுவதும் சாலை சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளில் தொய்வு ஏற்படும் அபாயம் உள்ளது.
சி.ஐ.டி.யூ., மாவட்ட குழு உறுப்பினர் ரமேஷ் கூறுகையில், ''மாவட்டத்தில் சாலை பணியாளர்கள் எண்ணிக்கை குறைவால், சாலையோர புதர்களை கூட அகற்ற முடியாத நிலையில், அதிக அளவில் வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. மேலும் இந்த பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கான முயற்சியிலும் அரசு ஈடுபட்டு உள்ளது. இதனால், சுற்றுலா மாவட்டத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இதனை தவிர்க்க, நெடுஞ்சாலைத்துறையில் காலியாக உள்ள சாலை பணியாளர் பணியிடங்களை, முழுமையாக நியமிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்னும் இரு ஆண்டுகளில் சாலை பணியாளர்கள், முழுமையாக ஓய்வு பெறும் நிலையில் உள்ளதால் பணியாளர்கள் இல்லாத நிலை ஏற்பட்டு, சாலைகள் முழுமையாக சேதமடைந்து வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் குழந்தைசாமி கூறுகையில், '' நெடுஞ்சாலை பணியாளர்களின் பணியிடங்களை நிரப்புவது அரசின் முடிவு. எனினும் பணியாளர்கள் பற்றாக்குறை குறித்து அரசின் பார்வைக்கு கொண்டு செல் லப்பட்டுள்ளது,'' என்றார்.

