/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாவட்டத்தில் தொடரும் மழையால் தோட்டங்களில் பராமரிப்பு பணி தீவிரம்! தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க நடவடிக்கை அவசியம்
/
மாவட்டத்தில் தொடரும் மழையால் தோட்டங்களில் பராமரிப்பு பணி தீவிரம்! தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க நடவடிக்கை அவசியம்
மாவட்டத்தில் தொடரும் மழையால் தோட்டங்களில் பராமரிப்பு பணி தீவிரம்! தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க நடவடிக்கை அவசியம்
மாவட்டத்தில் தொடரும் மழையால் தோட்டங்களில் பராமரிப்பு பணி தீவிரம்! தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க நடவடிக்கை அவசியம்
ADDED : ஜூலை 01, 2025 09:54 PM

ஊட்டி; 'மாவட்டத்தில் தொடரும் மழையால் காய்கறி, தேயிலை தோட்டங்களை பராமரிக்கும் வகையில், விவசாயிகளுக்கு தேவைக்கேற்ப உரங்களை கூட்டுறவு நிறுவனங்கள் விரைவாக வழங்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் மலைகாய்கறி மற்றும் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு, 20 ஆயிரம் ஏக்கரில் மலை காய்கறி விவசாய தோட்டங்கள்; 60 ஆயிரம் ஏக்கர் தேயிலை தோட்டங்கள் உள்ளன. இதனை நம்பி, 60 ஆயிரம் விவசாயிகள் மற்றும் 30 ஆயிரம் வியாபாரிகள் உள்ளனர்.
15 கூட்டுறவு தொழிற்சாலைகள்
மாவட்டத்தில்,15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில், 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாய உறுப்பினர்கள் தங்களது தேயிலை தோட்டத்தில் பறிக்கும் இலையை வினியோகித்து வருகின்றனர். மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதமான காலநிலை நிலவி வருகிறது.
இதனால், தேயிலை தோட்டங்களை பராமரிக்க ஏற்ற சீதோஷ்ண நிலை உள்ளது. பல ஆயிரம் ஏக்கரில் பாதிக்கப்பட்ட சிவப்பு சிலந்தி தாக்குதலும் படிப்படியாக குறைந்துள்ளது. மேலும், மாவட்டத்தில் மலை காய்கறி தோட்டங்களில் காய்கறி விளைய ஏதுவான சூழ்நிலை உள்ளது.
உர தேவை அதிகரிப்பு
இந்நிலையில், தேயிலை, மலை காய்கறி தோட்டங்களை பராமரிக்க விவசாயிகள் ஆயத்தமாகியுள்ளனர். குறிப்பாக, தேயிலை தோட்டங்களில், 'யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ்' உரங்களை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். விவசாயிகளின் உரத் தேவையை கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் தனியார் விற்பனை நிலையங்கள் பூர்த்தி செய்து வருகின்றன. தற்போதைய சூழ்நிலையில், கூட்டுறவு நிறுவனங்களில், 2,500 டன் அளவுக்கு உரங்கள் இருப்பு வைத்தால் விவசாயிகளுக்கு தடையின்றி தேவைக்கேற்ப உர மூட்டைகளை வழங்க முடியும். தற்போது, தேயிலை, மலை காய்கறி தோட்டங்களை பராமரித்து வருவதால், உரங்கள் தட்டுப்பாடின்றி வழங்கினால் மட்டுமே தேயிலை, காய்கறிகள் தரமாக விளைந்து, அதிக மகசூலை தரும், விவசாயிகளுக்கும் நஷ்டம் இல்லாத விற்பனை நடக்கும்.
இதனால், கூட்டுறவு நிறுவன அதிகாரிகள், உர வினியோகத்தை கண்காணித்து, சரியான நேரத்தில் உரம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறு விவசாயிகள் சங்க நிர்வாகி ராமன் கூறுகையில்,''மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு தேவையான உரங்கள், மாவட்ட கூட்டுறவு விற்பனை சங்கத்தின் அனைத்து கிளைகளில் தேவையான அளவு உடனடியாக இருப்பு வைக்க கூட்டுறவு நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக, 'யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ், சூப்பர் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ்,' உரங்களை விவசாயிகளுக்கு குறைவில்லாமல் வழங்க கூட்டுறவு நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.