/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலை சீரமைப்பு பணியில் குளறுபடி: விசாரணை அவசியம்
/
சாலை சீரமைப்பு பணியில் குளறுபடி: விசாரணை அவசியம்
ADDED : பிப் 05, 2025 11:56 PM

பந்தலுார்: 'பந்தலுார் பஜார் பகுதி சாலை சீரமைப்பில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழக- கேரளா மாநில இணைப்பு சாலையில் பந்தலுார் பகுதி உள்ளது. சாலையின் இரண்டு பக்கங்களிலும் கடைகள் செயல்பட்டு வருவதுடன், பெரும்பாலான கடைகள் சாலை ஓரங்களை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளன. இந்த பகுதியில், நெடுஞ்சாலை துறை மூலம் கடந்த முறை, 9.65 மீட்டர் அகலத்தில் சாலை சீரமைக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பெய்த மழையில், சாலை முழுமையாக சேதம் அடைந்தது.
குழிகளாக மாறிய சாலையில், மழை காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டது. கோடை காலங்களில் வாகனங்கள் செல்லும்போது, சாலை முழுவதும் துாசு மண்டலமாக மாறி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், 960 மீட்டர் துாரம் உள்ள, பஜார் பகுதி சாலையை சீரமைக்க, அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நெடுஞ்சாலை துறை மூலம், 300-மீட்டர் நீளமுள்ள சாலையை சீரமைக்கும் பணி துவக்கப்பட்டதுடன், சாலையின் அகலத்தை ஏழு மீட்டராக குறைத்துள்ளனர். இதனால் நொந்து போன மக்கள் மற்றும் வியாபாரிகள், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களிடம் இதுகுறித்து முறையிட்டனர்.
அவர்கள் கூறுகையில்,' இப்பகுதியில் ஏழு மீட்டர் அகலம் மட்டுமே சாலை அமைக்க முடியும்.
மீதமுள்ள சாலை பகுதி சீரமைக்க போதிய நிதி இல்லை,' என, தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பந்தலுார் பஜார் வணிகர் சங்கங்கள், பொதுமக்கள், பந்தலூர் வளர்ச்சி குழுவினர் இணைந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், வாகன ஓட்டுனர்களிடம் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். வியாபாரிகள் கூறுகையில், 'அந்த பணத்தை நெடுஞ்சாலைத்துறை பொறியாளரிடம் நேரில் ஒப்படைக்க உள்ளோம்,' என்றனர்.