/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
யானை கொன்றதாக நாடகம் துப்பாக்கி வழங்கியவர் கைது
/
யானை கொன்றதாக நாடகம் துப்பாக்கி வழங்கியவர் கைது
ADDED : ஜன 30, 2025 02:25 AM

கூடலுார்:கூடலுார் தேவர்சோலையில் யானை தாக்கி வாலிபர் இறந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவர் துப்பாக்கி தோட்டா பாய்ந்து பலியானது தெரிய வந்துள்ளது. அவருக்கு துப்பாக்கி வழங்கிய ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக, 13 பேரை கைது செய்துள்ள போலீசார், நாட்டுத் துப்பாக்கிகள், சொகுசு கார்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
நீலகிரி மாவட்டம், கூடலுார் தேவர்சோலை பகுதியைச் சேர்ந்தவர் ஜெம்ஷித், 37. தேவர்சோலை பேருராட்சி இளைஞர் காங்., தலைவராக இருந்த இவர், 25ம் தேதி அதிகாலை காட்டு யானை தாக்கி உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், வனவிலங்கை சுடும்போது தவறுதலாக அவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் அவர் இறந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அவரது மரணம், யானையால் நடந்தது போல நாடகம் ஆட முயன்றதாக, 13 பேரை கைது செய்துள்ள போலீசார், மூன்று நாட்டுத் துப்பாக்கிகள், இரண்டு சொகுசு கார்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இதற்கிடையே, இந்த கும்பல் வேட்டைக்கு சென்றபோது, நாட்டுத் துப்பாக்கிகளுடன் சென்றுள்ளனர். அவர்களுக்கு மூன்று நாட்டுத்துப்பாக்கிகளை கொடுத்தது யார் என போலீசார் விசாரித்தனர். பின், அப்துல் ரகுமான், 59, என்பவரை கைது செய்தனர்.

