ADDED : ஏப் 08, 2026 08:04 PM

பாலக்காடு: பாலக்காடு அருகே, வெளிமாநில தொழிலாளியை அடித்துக் கொலை செய்த வழக்கில், ஜாமினில் வந்த முக்கிய குற்றவாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், வாளையார் அட்டப்பள்ளத்தை சேர்ந்த ஒரு கும்பல், கடந்த டிச. 17ம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ராம்நாராயணன் என்ற தொழிலாளியை, வங்கதேசத்தை சேர்ந்த ஊடுருவல்காரர் என தவறாகக் கருதி, கொடூரமாக தாக்கியது.
இதில், படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் கேரளா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், கைது செய்யப்பட்ட, 6-வது குற்றவாளியான கிழக்கு அட்டப்பள்ளத்தை சேர்ந்த வினோத்குமார் 54, சமீபத்தில் மண்ணார்க்காடு சிறப்பு நீதிமன்றத்தால் ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில், நேற்று காலை வீட்டின் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் வினோத்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை அப்பகுதி மக்கள் கண்டனர். தகவலறிந்த வாளையார் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முன்னதாக, வினோத்குமாருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக் கோரி, புலனாய்வுக் குழு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்கவிருந்த நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
