/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மசினி அம்மன் கோவில் தசரா தேர் திருவிழா
/
மசினி அம்மன் கோவில் தசரா தேர் திருவிழா
ADDED : செப் 30, 2025 10:02 PM

கூடலுார்; முதுமலை, மசினகுடியில் அமைந்துள்ள மசினி அம்மன் கோவிலில் தசரா திருவிழா, 21ம் தேதி காலை, 8:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து மாலை, மாயாறு கிராமத்திலிருந்து ஸ்ரீ மசினி அம்மனை ஊர்வலமாக அழைத்து வந்தனர். 22 முதல் 28ம் தேதி வரை ஸ்ரீ சிக்கமன், தொட்டம்மன், தண்டு மாரியம்மன் மற்றும் இரத தங்கைகளுக்கு, தினமும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
நேற்று முன்தினம், காலை, 8:30 மணிக்கு சொக்கநள்ளி மாதேஸ்வரன் கோவிலில் இருந்து கத்தி எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இரவு, 10:00 மணிக்கு தசரா தேர் திருவிழா ஊர்வலம் துவங்கியது. கூடலுார் டி.எஸ்.பி., வசந்தகுமார், மசினகுடி இன்ஸ்பெக்டர் சுப்புரத்தினம் ஆகியோர் வடம் பிடித்து தேர் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் மசினி அம்மன் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.
தேர் ஊர்வலம் விநாயகர் கோவில் தெரு, மசினகுடி கேம்ப், குரூப் ஹவுஸ், ஊட்டி சாலை சென்று, மசினகுடி மெயின் பஜார் வழியாக நேற்று காலை, 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில் நிறைவு பெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாலை முளைப்பாரி எடுத்து வருதல் மற்றும் மாவிளக்கு பூஜைகள் நடந்தது. இன்று சிறப்பு பூஜைகளுடன் ஸ்ரீசிக்கமனை வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி மற்றும் மசினகுடி மக்கள் செய்திருந்தனர்.