தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அதிகரிக்கும் விதிமீறல்களால் தொடரும் உயிர் பலிகள் 'காற்றில்' பறக்கவிடப்படும் 'மாஸ்டர் பிளான்'

 அதிகரிக்கும் விதிமீறல்களால் தொடரும் உயிர் பலிகள் 'காற்றில்' பறக்கவிடப்படும் 'மாஸ்டர் பிளான்'

 அதிகரிக்கும் விதிமீறல்களால் தொடரும் உயிர் பலிகள் 'காற்றில்' பறக்கவிடப்படும் 'மாஸ்டர் பிளான்'


ADDED : ஜன 20, 2026 06:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2026 06:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னுார்: நீலகிரியில் அதிகரிக்கும் கட்டட விதிமீறல்களால் அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் சம்பவங்கள் தொடர்கின்றன.

குன்னுாரில், கடந்த, 17ல், ஓதனட்டியில் கட்டுமான பணிகளுக்கு அனுமதி பெற்று, உயரமான இடத்தில் தடுப்பு அமைக்க மண் தோண்டியதில் மண்சரிந்து, வட மாநில தொழிலாளர்கள் மூன்று பேர் பலியாகினர்.

'செங்குத்தான சரிவுகளில், 30 சதவீதத்திற்கு அதிகமான சரிவுகளில் பள்ளம் தோண்ட தடை; அதிர்வுகளால் ஏற்படும் மண்சரிவை தடுக்க பொக்லைன் தடை,' என, பல விதிமுறைகள் ஐகோர்ட் உத்தரவின் பேரில் நடைமுறைப்படுத்தப்பட்டும், அவை 'காற்றில்' பறக்கவிடப்பட்டு விதிமீறல்கள் தொடர்ந்து வருகின்றன.

உள்ளூர் மக்கள் 'மாஸ்டர் பிளான்' சட்டத்தின் கீழ், சிறிய வீடுகள் கட்ட விண்ணப்பிக்கும் அனுமதி இழுத்தடிப்பு செய்து வரும் நிலையில், அரசியல்வாதிகள் ஆதரவுடன், வெளி மாநிலத்தவரின் காட்டேஜ்கள், பங்களாக்கள் பல்வேறு இடங்களில் கட்டப்பட்டு வருகின்றன.

விதிகளில் ஏற்பட்ட தளர்வுகளால் சிக்கல் நீலகிரியில், 7 மீட்டர் மட்டுமே கட்ட அனுமதி இருந்த நிலையில், நடுத்தர மக்கள் வசதிக்காக என கூறி, 2019ல் விதிகளில் தளர்வு செய்து, கட்டட உயரம், 10 மீ., வரை உயர்த்தப்பட்டது.

3,200 சதுர அடிக்கு உட்பட்ட வீடுகளுக்கு மாவட்ட அளவில் அனுமதி பெறும் வசதி வந்ததால், இந்த தளர்வை வணிக நோக்கில் கட்டுபவர்கள் சாதகமாக்கினர்.

கட்டட அனுமதிபெற, 'வருவாய், புவியியல், வனம், வேளாண் துறைகளின் சான்றிதழ் (என்.ஓ.சி.,) அவசியம். நிலத்தின் உறுதி தன்மை மிக முக்கியம்,' என்ற விதிமுறைகள் இருந்த போதும், அதனையும் மீறி, பல இடங்களில், 40 அடி உயரத்திற்கு மேல், செங்குத்தாக தடுப்பு சுவர் அமைப்பது விபத்துக்கு முதன்மை காரணமாக அமைந்து வருகிறது.

அனுமதிக்கு மாறாக கூடுதல் கட்டடம் மேலும், அனுமதி பெறப்பட்ட வரைபடத்திற்கு மாறாக கூடுதலாக கட்டப்படும் கட்டடங்களை தடுக்க வேண்டிய அதிகாரிகள், அரசியல் நிர்பந்தம், 'கவனிப்பு' வாங்கி கண்டு கொள்ளாமல் உள்ளனர். குன்னுார் மக்கள் கூறுகையில்,' பேரிடர் பட்டியலில் உள்ள குன்னுார் பகுதியில் அடிக்கடி நடக்கும் உயிரிழப்பின் போது, இழப்பீடு வழங்குவதை விட, விதிமுறைகளை முறையாக பின்பற்றி உயிர்பலிகள் தடுக்கப்பட வேண்டும்.

அரசின் விதிகளை மதிக்காமல், அரசியல் வாதிகளின் கைபாவைகளாக இருக்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில், மலை மாவட்டத்தில் நடக்கும் மனித பலிகளை தடுக்க முடியாது,' என்றனர்.

'ஹாகா கமிட்டி இருந்து என்ன பயன்?

நீலகிரி ஆவண மைய கவுரவ தலைவர் தர்மலிங்கம் வேணுகோபால் கூறுகையில்,''மலைகளை காக்கவும், அனுமதியின்றி கட்டுமானங்கள் எழுப்பவதை தடை செய்யவும், 1990ல் அமைத்த மலையிட பாதுகாப்பு குழுமம் (ஹாகா) கமிட்டி அமைக்கப்பட்டது. 2004ம் ஆண்டிற்கு பிறகு, வேலியே பயிரை மேய்ந்தது போன்று, இதன், பணம் படைத்தவர்கள் பல்வேறு ஆதரவுகளுடன் அனுமதியை வைத்து கண்மூடித்தனமான 'ரிசார்ட்' உட்பட எண்ணிலடங்காத கட்டுமானங்கள் பெருகியது. ரிசார்ட்களில், 200 முதல் 300 சதவீத விதிமீறல், ஊழல்கள் அதிகரித்து, இந்த தொடர் சுழற்சிக்கு அதிகாரிகள் துணை நிற்கின்றனர். தற்போது விதிமீறல், ஊழல்கள் அதிகரிக்க காரணமாக இருக்கும் ஹாகா கமிட்டியை கலைக்கவும், அதுவரை இந்த கமிட்டியை சஸ்பெண்ட் செய்வதும் அவசியம். கட்டட தொழிலாளர் உயிரிழப்புக்கு ஹாகா கமிட்டியே முழு பொறுப்பு ஏற்க வேண்டும். இது குறித்து மாநில முதல்வருக்கு மனு அனுப்பி உள்ளேன்,'' என்றார்.



கடந்த 10 ஆண்டுகளின் பலி எண்ணிக்கை

1. 2026 ஜன.,17-குன்னூர் ஓதனட்டி கட்டுமான தடுப்பு சுவர் மண் தோண்டியதில், 3 பேர், 2. 2025 டிச.,26 -கோத்தகிரி குண்டாடா கிணறு தோண்டியதில், 2 பேர். 3. 2024, நவ., 27-குன்னூர் டைகர் ஹில் கட்டட இடிப்பு, சிலாப்கள் விழுந்து ஒருவர். 4. 2024 மார்ச் 13 -ஊட்டி பெர்ன்ஹில், மண் தோண்டியதில் ஒருவர். 5. 2024 பிப்.,7 -ஊட்டி (காந்தி நகர்) பழைய கட்டடம். மண் சரிந்து, 6 பேர். 6. 2022 அக்.9, -ஊட்டி மஞ்சன கொரை , கட்டுமான பணி மண்சரிவு, 2 பேர். 7. 2018, மே -குன்னுார் (சி.எம்.எம்.எஸ்.) கட்டுமான பணி மண் சரிவு ஒருவர். 8. 2016 டிச. 22 -குன்னூர் (டிரம்ளா) - கட்டுமான இடிபாடு -4 பேர். இதே போல, கூடலுாரில், 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டுமான பணி மண்சரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பந்தலுாரில், 25 ஆண்டுகளுக்கு முன்பு மண் சரிந்து, 3 பேர் பலியாகினர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us