/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேயிலை தோட்டங்களில் பரவி வரும்... மைட்ஸ் நோய்!விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு
/
தேயிலை தோட்டங்களில் பரவி வரும்... மைட்ஸ் நோய்!விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு
தேயிலை தோட்டங்களில் பரவி வரும்... மைட்ஸ் நோய்!விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு
தேயிலை தோட்டங்களில் பரவி வரும்... மைட்ஸ் நோய்!விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு
ADDED : மார் 18, 2024 12:38 AM

கோத்தகிரி:நீலகிரியில் உள்ள தேயிலை தோட்டங்களில் 'மைட்ஸ்' நோய் தாக்கம் அதிகரித்து வருவதால், விவசாயிகளுக்கு பெருமளவு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், நீர் ஆதாரமுள்ள விளை நிலங்களில் மட்டும் மலை காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது. பெரும்பாலான நிலப்பரப்பில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பொருளாதாரம், தேயிலை விவசாயத்தை நம்பியுள்ளது.
பல ஆண்டுகளாக தேயிலை விலை வீழ்ச்சி காரணமாக, விவசாயிகள் தங்களது தோட்டங்களையும், குடும்பங்களையும் பராமரிக்க முடியாமல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விலை போதுமானதாக இல்லை
தற்போது, வாராந்திர விலையாக, 18 ரூபாய், ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு விலை கிடைத்து வருகிறது. கூலி உயர்வு, தோட்ட பராமரிப்பு செலவு, உரம், பூச்சிக்கொல்லி மருந்து உட்பட இடுப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.
இந்த செலவினங்களை கணக்கிட்டால், தற்போது கிடைத்து வரும் விலை, விவசாயிகளுக்கு போதுமானது இல்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களாக, தொடர்ந்து வறட்சியான காலநிலை நிலவுவதால், ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள தேயிலை தோட்டங்களில், 'மைட்ஸ்' எனப்படும் சிவப்பு சிலந்தி நோய் தாக்கி வருகிறது.
இந்த நோய் தாக்கத்தால், தேயிலை தோட்டங்கள் பசுமையை இழந்து, மஞ்சள் நிறமாக மாறி வருகிறது. பெரும்பாலான தோட்டங்களில், இலைகள் உதிர்ந்து குச்சிகள் மட்டுமே எஞ்சி நிற்கிறது.
மகசூல் வெகுவாக குறைவு
இதனால், விவசாயிகளுக்கு மகசூல் குறைந்துள்ளது. சிவப்பு சிலந்தி நோயால் பாதிக்கப்பட்டுள்ள தேயிலை தோட்டங்கள் மீண்டும் பழைய நிலையை அடைந்து, பசுந்தேயிலை துளிர் விட கண்டிப்பாக மழை பெய்தாக வேண்டும்.
அதுவரை, விவசாயிகளுக்கு மகசூல் குறைந்து, வருவாய் இழப்பு அதிகரிக்கும் நிலை உள்ளது. மத்திய, மாநில அரசுகள், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, மானியம் வழங்க வேண்டும்.
நீலகிரி மலை மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகி போஜராஜன் கூறுகையில்,''நீலகிரியில் கடும் வறட்சி நிலவுவதால் மைட்ஸ் நோய் அதிகரித்துள்ளது. இதனால், விவசாயிகள் அன்றாடம் செலவுக்கு கூட பணம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காணாமல், மத்திய, மாநில அரசுகள், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, மானியம் வழங்க வேண்டும்,'' என்றார்.
நீலகிரி மாவட்ட தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலா மேரி கூறுகையில்,''மாவட்டத்தில் நிழல் மற்றும் தண்ணீர் வசதி இல்லாத தேயிலை தோட்டங்களில், சிவப்பு சிலந்தி நோயின் தாக்கம் இருந்து வருகிறது.
இந்த நோயை கட்டுப்படுத்த, தேயிலை வாரியத்திற்கும் தெரிவிக்கப்பட்டு, வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. விவசாயிகள் தேயிலை வாரியத்தை அணுகினால், தேவையான உதவிகள் கிடைக்கும்,'' என்றார்.

