/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ராஜவாய்க்கால் பகுதியில் எம்.எல்.ஏ., ஆய்வு
/
ராஜவாய்க்கால் பகுதியில் எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : பிப் 28, 2024 09:32 PM
பெ.நா.பாளையம் : துடியலுார் அருகே சின்னவேடம்பட்டி ராஜவாய்க்கால் பகுதியில், குடிநீர் குழாய் அமைத்த இடத்தை, கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அருண்குமார் ஆய்வு செய்தார்.
கணுவாய் தடுப்பணை பகுதியில் இருந்து துடியலுார் வழியாக சின்னவேடம்பட்டி ஏரிக்கு ராஜ வாய்க்கால் வாயிலாக தண்ணீர் செல்கிறது. பருவமழை காலங்களில் ராஜ வாய்க்கால் வழியாக தண்ணீர் வெள்ளமென பெருகி ஓடும்.
துடியலுார் வளர்மதி நகர் அருகே ராஜ வாய்க்காலின் குறுக்கே, பில்லுார் மூன்றாம் குடிநீர் திட்டத்துக்கான ராட்சத குழாயை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் அமைத்தனர்.
இதற்கு வெள்ளக் கிணறு, தடாகம், துடியலுார் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மழைக்காலத்தின் போது ராஜவாய்க்காலில் செல்லும் நீரை, இக்குழாய் தடுத்து நிறுத்தும்.
இதனால் குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்து பெரும் சேதம் ஏற்படும். தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகளும் பாதிக்கப்படுவர். இதை கண்டித்து, விவசாயிகள் தரப்பில் போராட்டம் நடத்தப்படும் என, அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அருண்குமார், இங்கு ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு, குடிநீர் குழாய் கொண்டு செல்வதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்யுமாறு ஆலோசனை வழங்கினார்.

