/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டு யானைகளை விரட்ட 'மொபைல் டிரோன்' கேமரா குழு; கூடலுார் வன அலுவலர் தகவல்
/
காட்டு யானைகளை விரட்ட 'மொபைல் டிரோன்' கேமரா குழு; கூடலுார் வன அலுவலர் தகவல்
காட்டு யானைகளை விரட்ட 'மொபைல் டிரோன்' கேமரா குழு; கூடலுார் வன அலுவலர் தகவல்
காட்டு யானைகளை விரட்ட 'மொபைல் டிரோன்' கேமரா குழு; கூடலுார் வன அலுவலர் தகவல்
ADDED : ஜன 06, 2025 12:53 AM

பந்தலுர்; கூடலுார் வன கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கான, விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், பந்தலுார் அருகே சேரம்பாடி வனச்சரக அலுவலக வளாகத்தில் நடந்தது.
வனச்சரகர் அய்யனார் வரவேற்றார். அதில், சேரங்கோடு ஊராட்சி தலைவர் சந்திரபோஸ்; வார்டு உறுப்பினர் வினோத் கண்ணா; மக்கள் வாழ்வாதார இயக்க நிர்வாகிகள் சிபி, தேவதாஸ்; முதுமலை ஊராட்சி முன்னாள் தலைவர் வாசு; விவசாயிகள் தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் விஜயசிங்கம் விவசாயிகள் பிரச்னை குறித்து பேசினர்.
தொடர்ந்து, கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு பேசியதாவது:
கூடலுார் நில பிரச்னைக்கு தீர்வு காண வேண்டியது, ஜென்மம் பிரிவு வருவாய் துறை அதிகாரிகள். அவர்கள் குறிப்பிட்ட நிலப்பகுதியை வனத்துறைக்கு ஒப்படைக்கும் நிலையில் அது வனமாக மாற்றம் செய்யப்படுகிறது. வன விலங்குகளால், வளர்ப்பு கால்நடைகள் பாதிக்கப்பட்டால் உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மேலும், குடியிருப்பு பகுதிகளில் யானைகளின் அச்சுறுத்தலை கட்டுப்படுத்தும் வகையில், அவற்றை வனப்பகுதிக்குள் விரட்ட ஏதுவாக 'டிரோன் கேமரா' பயன்படுத்தப்பட உள்ளது.
இதற்காக மொபைல் டிரோன் கேமரா குழு ஏற்படுத்தப்பட உள்ளது. கடந்த ஆண்டு, 850 தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. வரும் ஆண்டிலும் உத்தரவு கிடைத்தால் மேலும் தெருவிளக்குகள் அமைக்கப்படும். யானைகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், யானைகளை ஆட்கொல்லி யானைகள் என்று கூறுவதை கைவிட வேண்டும். யானை-மனித மோதல் என்பது எதிர்பாரா விதமாக நடக்கிறது.
அத்துடன் கிராமப் பகுதிகளுக்குச் செல்லும் சாலை உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளும் போது, அரசு அறிவுறுத்தலை பின்பற்றி உரிய கால அவகாசத்தில் அனுமதி பெறுவது அவசியம். என்னிடம் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் அல்லது அதிகாரிகளை அழைத்து வந்தால் அதற்கான விளக்கம் கொடுக்க தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து. மனிதர்களை அச்சுறுத்தி வந்த புல்லட் யானையை உடனடியாக பிடித்த வனக்குழுவினருக்கு ஊராட்சி மூலம் நன்றி தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் உதவி வன பாதுகாவலர் அருள்மொழிவர்மன், வனச்சரகர்கள் ரவி, சஞ்சீவி,வீரமணி, சுரேஷ், ராதாகிருஷ்ணன், ரியாஸ்மீரான். வனவர் முத்தமிழ் உள்ளிட்ட வனக்குழுவினர் மற்றும் பொதுமக்கள், விவசாயிகள் பங்கேற்றனர். வனவர் ஆனந்த் நன்றி கூறினார்.

