நவீன முறையில் செயல்படும் பாதுகாப்பு கணக்கு துறை: எம்.ஆர்.சி., கமாண்டன்ட் பாராட்டு
நவீன முறையில் செயல்படும் பாதுகாப்பு கணக்கு துறை: எம்.ஆர்.சி., கமாண்டன்ட் பாராட்டு
UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 09:34 PM

குன்னுார்: குன்னுார் அருகே வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சம்பள கணக்கு அலுவலக தின விழா மற்றும் இந்திய பாதுகாப்பு கணக்கு துறையின், 276 வது ஆண்டு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.
'வந்தே மாதரம்' பாடலுடன் துவங்கிய விழாவில், துறையின் ஒருங்கிணைந்த நிதி ஆலோசகர் டென்ஹான் வரவேற்று பேசுகையில், ‘‘நம் நாட்டில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், 1747ம் ஆண்டு துவக்கப்பட்ட பிரிட்டிஸ் ராணுவ கணக்கு துறை, 1951 அக்., 1ல் பாதுகாப்பு கணக்கு துறை என, பெயர் மாற்றம் கண்டு, 276 ஆண்டுகளுக்கும் மேலான மிக தொன்மையான பாரம்பரியம் கொண்ட துறையாக விளங்குகிறது,’’ என்றார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மெட்ராஸ் ரெஜிமென்டல் சென்டர் கமாண்டன்ட் பிரிகேடியர் கிருஷ்ணேந்து தாஸ் பேசுகையில், ‘‘ நம் நாட்டின் ராணுவ வீரர்களுக்கு ஊதியம் மற்றும் படிகள் வழங்குதல், கணக்கு தணிக்கை, நிதி ஆலோசனை உள்ளிட்ட முக்கிய பணிகளை அர்ப்பணிப்புடன் பாதுகாப்பு கணக்கு துறை வழங்கி வருகிறது.
காகித கணக்குகளிலிருந்து டிஜிட்டல் முறைக்கு மாறியுள்ள நவீன வளர்ச்சியால், ராணுவ வீரர்களுக்கு கணக்கு விவரங்கள் மற்றும் நிலுவையிலுள்ள கோரிக்கைகளை உரிய காலத்தில் தாமதமின்றி முடித்து கொடுத்து சிறப்பாக செயல்படுகிறது. அலுவலகத்திற்கு தேவையான நிதியுதவி மற்றும் ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும்,’’ என்றார். தலைமை பதிவு அதிகாரி லெப். கர்னல் குலாம் சிங் வாழ்த்தி பேசினார். சீனியர் கணக்கு அலுவலர் சரத் சந்திரபாபு நன்றி கூறினார்.
