/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோத்தர் பழங்குடியினரின் 'மூர் கம்பட்டராயர்' விழா; குன்னுார் அருகே கொல்லிமலையில் கோலாகலம்
/
கோத்தர் பழங்குடியினரின் 'மூர் கம்பட்டராயர்' விழா; குன்னுார் அருகே கொல்லிமலையில் கோலாகலம்
கோத்தர் பழங்குடியினரின் 'மூர் கம்பட்டராயர்' விழா; குன்னுார் அருகே கொல்லிமலையில் கோலாகலம்
கோத்தர் பழங்குடியினரின் 'மூர் கம்பட்டராயர்' விழா; குன்னுார் அருகே கொல்லிமலையில் கோலாகலம்
ADDED : ஜன 17, 2025 12:23 AM

குன்னுார்; குன்னுார் கேத்தி அருகே கொல்லிமலை கிராமத்தில், கோத்தர் இன மக்களின் 'மூர் கம்பட்டராயர்' விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் வாழும் கோத்தர் பழங்குடியின மக்கள் கொல்லிமலை, கோத்தகிரி, திருச்சிக்கடி உள்ளிட்ட, 7 கிராமங்களில் வசிக்கின்றனர்.
அதில், குன்னுார் அருகே உள்ள கொல்லிமலையில், கோத்தரின மக்களின் 'அய்யனோர்; அம்மனோர்' எனும் 'மூர் கம்பட்டராயர்' திருவிழா கொல்லிமலை கிராமத்தில் நடந்து வருகிறது.
இப்பகுதியில் உள்ள 'அய்யனோர்; அம்மனோர்' கோவில்களில், விரதம் இருந்த கோத்தரின ஆண்கள் பூஜை செய்து வழிபட்டனர். 'வெருகுரி' சாஸ்திரம் எனப்படும் விழாவில், தினை, அவரை, உப்பு கொண்டு, ஆண்களால் சமைத்த பொங்கல் கோவிலில் வைத்து வழிபாடு செய்து, வீடுகளில் உள்ளவர்களுக்கு வழங்கினர்.
15 நாட்கள் விரதம் இருந்த மக்கள், ஆடல், பாடல்களுடன், விவசாயம் செழிக்கவும்; மழை வேண்டியும்; தானியங்கள் வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். குலதெய்வத்தை வரவேற்கும் வகையில், இசை கருவிகளின் இசைக்கு ஏற்ப, பாரம்பரிய உடை அணிந்து, பெண்கள் நடனமாடினர்.
ஆண்; பெண் சமம்
தொடர்ந்து, 'ஆண்; பெண் இருவரும் சமம் என்பதை வலியுறுத்தும், 'அட்டாஸ்: குப்பாஸ்' எனப்படும் பாரம்பரிய நடனத்தில், வண்ண உடை மற்றும் அணிகலன்கள் அணிந்த ஆண்கள் நடனமாடினர்.
பிரேம்லீலா என்பவர் கூறுகையில், ''அய்யனோர்; அம்மனோரை குல தெய்வமாக வணங்குகிறோம். 12 மாதங்களில் பிறை பார்த்து, டிச., அல்லது ஜனவரியில் பண்டிகை கொண்டாடுகிறோம். கடைசி நாள் திருவிழாவான, மூர் கம்பட்டராயர் திருவிழாவில் அனைவரும் வந்து பங்கேற்பர். கடவுளுக்கும், நடனத்திற்கும் என தனி, தனி இசை உள்ளது.
விழாவில், 4 விதமான நடனங்களில், இசையும் வெவ்வேறாக இருக்கும். ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே மகளிர் கோவிலுக்கு செல்வர்,''என்றார்.