/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பெயர்ந்த 'சோளிங்' சாலை; மண்ணை கொட்டி மூடும் பணி
/
பெயர்ந்த 'சோளிங்' சாலை; மண்ணை கொட்டி மூடும் பணி
ADDED : ஜன 31, 2024 10:20 PM

பந்தலுார் : பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சி, 7-வது வார்டு பகுதியில் தைதல்கடவு கிராமம் உள்ளது.
அங்கு செல்லும் மண் சாலையை தார் சாலையாக மாற்றி தர வலியுறுத்தி, மக்கள் கடந்த, 50 ஆண்டுகளாக போராடி வந்தனர்.
தொடர்ந்து, கடந்த, 3 மாதங்களுக்கு முன், கூடலுார் ஊராட்சி ஒன்றியம் சார்பில், 39 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மண் சாலை சோளிங் சாலையை மாற்றிய நிலையில், பெயரளவுக்கு பணி மேற்கொண்டதால் கற்கள் முழுமையாக பெயர்ந்து, சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதன் பாதிப்பு குறித்து கடந்த, 29ம் தேதி 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதனையடுத்து ஊராட்சி சார்பில், நேற்று முன்தினம் மாலை புதிய தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது.
அதில், 'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம் பணி மேற்கொண்டதாகவும், 1,424 பணியாளர்கள் மூலம் பணி நடந்தது,' என, தெரிவித்துள்ளனர். மேலும், கடந்த, 2 நாட்கள் பணியாளர்கள் கற்கள் மீது, மண்ணை கொட்டி கற்களை மூடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தரமற்ற முறையில் ஒப்பந்ததாரர் பணி மேற்கொண்ட நிலையில், புதிய தகவல் பலகை வைத்து, மண்ணை கொட்டி பணி நடந்த செயல் மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி வருகிறது.
கிராம மக்கள் கூறுகையில், 'இந்த சாலை பணி நடந்தது குறித்து மாவட்ட கலெக்டர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.