முதுமலை- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில்...யானைகளுக்கு இடையூறு! வாகன ஓட்டுனர்களுக்கு வனத்துறை எச்சரிக்கை
முதுமலை- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில்...யானைகளுக்கு இடையூறு! வாகன ஓட்டுனர்களுக்கு வனத்துறை எச்சரிக்கை
ADDED : பிப் 26, 2024 11:31 PM

கூடலுார்:'முதுமலையில், காட்டு யானைகள் சாலையை கடந்து செல்லும் போது, அவைகளுக்கு வாகன ஓட்டுனர்கள் இடையூறு ஏற்படுத்த வேண்டாம்,' என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
முதுமலை புலிகள் காப்பகத்தில், கடந்த ஆண்டு, பருவமழையின் தாக்கம் குறைந்ததால், கோடைக்கு முன்பாகவே, வறட்சியின் தாக்கம் அதிகரித்து வனப்பகுதி பசுமை இழந்து காணப்படுகிறது.
வனவிலங்குகளுக்கு உணவு; குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால், அவை உணவு, குடிநீர் தேடி, கேரளா, கர்நாடக மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றன. மேலும், முதுமலையில் முக்கிய நீர் ஆதாரமான மாயார் ஆற்றை நோக்கி வனவிலங்குகள் வர துவங்கியுள்ளன. இவைகள், இந்த ஆற்றை ஒட்டிய மைசூரு தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் மேய்ச்சலில் ஈடுபடுவதுடன் அடிக்கடி சாலையை கடந்து செல்கின்றன.
வன விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், முதுமலையில் உள்ள தண்ணீர் தொட்டிகள்; குட்டைகளில், வனத்துறை வாகனங்களில் தண்ணீர் கொண்டு சென்று ஊற்றும் பணியில், வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், வனத்தீ ஏற்படாமல் இருக்க, கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். வன விலங்குகள் அதிகளவில் நடமாடும் பகுதிகளில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சாலையை கடக்கும் போது இடையூறு
வனத்துறையினர் கூறுகையில், 'இவ்வழியில், பயணிப்பவர்கள் சாலையோரம் நிற்கும் வனவிலங்குகள் அருகே வாகனங்களை நிறுத்தி, இடையூறு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்; காட்டு யானைகள் சாலையை கடக்க முயற்சிக்கும் போது, இடையூறு ஏற்படுத்தினால், தாக்கும் அபாயம் உள்ளது.
எனவே, யானைகள் சாலையை கடக்கும் போது, வாகனங்களை நிறுத்தி, அவை கடந்து சென்ற பின், பயணத்தை தொடர வேண்டும்.
எனினும், சில ஓட்டுனர்கள்; சுற்றுலா பயணிகள், யானைகள் சாலையை கடக்கும் போது, அவைக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். அவ்வாறு செய்தால் வனச்சட்டத்தின் படி நடவடிக்கை எடுப்படும்,' என, எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
