/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கேரளாவில் கொலை: தமிழக வனத்தில் புதைப்பு: குற்றவாளியை அழைத்து வந்து விசாரணை
/
கேரளாவில் கொலை: தமிழக வனத்தில் புதைப்பு: குற்றவாளியை அழைத்து வந்து விசாரணை
கேரளாவில் கொலை: தமிழக வனத்தில் புதைப்பு: குற்றவாளியை அழைத்து வந்து விசாரணை
கேரளாவில் கொலை: தமிழக வனத்தில் புதைப்பு: குற்றவாளியை அழைத்து வந்து விசாரணை
ADDED : ஜூலை 12, 2025 01:35 AM

பந்தலுார்; கேரளா மாநிலம் வயநாடு பகுதியைச் சேர்ந்தவர் ஹேமச்சந்திரன்,53. 'கோழிக்கோடு பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்த இவரை, கடந்த, 2024ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் காணவில்லை,' என, கோழிக்கோடு மெடிக்கல் காலேஜ் காவல் நிலையத்தில் அவரின் குடும்பத்தினர் புகார் அளித்தனர்.
போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், 'அவர், ஏப்.,1ம் தேதி கொலை செய்யப்பட்டு, தமிழக எல்லைக்கு உட்பட்ட, நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே சேரம்பாடி காபிக்காடு சாலையோர வனப்பகுதியில் உடல் புதைக்கப்பட்டது,' என, தெரியவந்தது.
இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய, வயநாடு சுல்தான் பத்தேரி பகுதியை சேர்ந்த அஜீஸ், ஜோதிஷ்குமார் இருவரையும் போலீசார் கைது செய்து, கடந்த மாதம், 28ம் தேதி தமிழகத்துக்கு அழைத்து வந்தனர். பின், சேரம்பாடியில் புதைக்கப்பட்ட ஹேமச்சந்திரன் உடலை மீட்டு, ஊட்டி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லுாரியில் பிரேத பரிசோதனை செய்து கேரளாவுக்கு கொண்டு சென்றனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான வயநாடு பீனாட்சி என்ற இடத்தை சேர்ந்த நவ்ஷாத்,40, என்பவர், சவுதியில் இருந்தார். அவரை நேற்று முன்தினம் கைது செய்து, கேரளாவுக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், 'கொலை செய்த உடலை சோதனை சாவடி இல்லாத சாலையான, கேரளா சுள்ளியோடு, குணில், வெட்டுவாடி வழியாக எருமாடு பகுதிக்கு வந்து, அங்கிருந்து உடலை காபிக்காடு பகுதிக்கு கொண்டு வந்து புதைத்தனர்,' என்பது தெரிய வந்தது.
தொடர்ந்து, கேரள- தமிழக எல்லையில் உள்ள, சேரம்பாடி காபிக்காடு சாலையோர வனப்பகுதிக்கு நேற்று நவ்ஷாத்தை அழைத்து வந்து, போலீசார் நடத்திய விசாரணையின் போது, ஹேமச்சந்திரனை அங்குள்ள உள்ள வீட்டில் கொலை செய்த இடம் மற்றும் உடலை புதைக்க, சர்க்கரை, பெட்ரோல், சாக்குப்பை வாங்கிய கடைகளையும் அடையாளம் காட்டினார். கோழிக்கோடு போலீஸ் உதவி கமிஷனர் உமேஷ் கூறுகையில், '' இந்த கொலை சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது. இதில், தொடர்புடைய பிற குற்றவாளிகளை விரைவில் கைது செய்து, ஒரு வாரத்திற்குள் விசாரணை இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும்,'' என்றார்.

