/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டுநாயக்கர் சமுதாய பழங்குடியின மக்களின் "நர்மதா" நிகழ்ச்சி
/
காட்டுநாயக்கர் சமுதாய பழங்குடியின மக்களின் "நர்மதா" நிகழ்ச்சி
காட்டுநாயக்கர் சமுதாய பழங்குடியின மக்களின் "நர்மதா" நிகழ்ச்சி
காட்டுநாயக்கர் சமுதாய பழங்குடியின மக்களின் "நர்மதா" நிகழ்ச்சி
ADDED : மே 19, 2024 01:44 PM

பந்தலூர் : நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதிகளில் காட்டுநாயக்கர் சமுதாய பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சுமார் 68 கிராமங்களில் வாழ்ந்து வரும் இவர்களில், பெண் குழந்தைகள் பூப்பெய்தும் நிகழ்வு 'நரமதா' எனும் பெயரில் சிறப்பு சடங்காக செய்யப்பட்டு வருகிறது.
பெண் குழந்தைகள் பூப்பெய்தியவுடன் வீட்டு வாசலில் ஒதுக்குப்புறமாக 'கும்மனா' என்று அழைக்கப்படும் கூம்பு வடிவத்தில் குடில் கட்டப்படுகிறது. அதனுள் பூப்பெய்தியை சிறுமி மற்றும் அவரது சிறு வயது தோழியுடன் உள்ளே வைத்து மூடப்படுகிறது. அந்த குழந்தைகளின் அனைத்து தேவைகளையும் பெண்கள் மட்டுமே கவனிப்பார்கள். 30 நாட்கள் முடிந்தவுடன் அன்று மாலை முதல் சிறுமியை வெளியே அழைத்துவரும் நிகழ்வான 'கொம்மன இருப்பதே' எனும் நிகழ்வு நடத்தப்படுகிறது.
முதல் நாள் மாலை முதல் இசைக்கருவிகளுடன் பெண்கள், ஆண்கள் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். 31 ஆம் நாள் அதிகாலை 6 மணிக்கு ஊர் பெரியவர்கள் முன்னிலையில் சிறுமிக்கும் அவர்களின் குல தெய்வத்திர்க்கும் பாக்கு வெற்றியுடன் காணிக்கை வைத்து, பின்னர் அந்த குடிலை அகற்றி பெண் குழந்தைகளை வெளியே அழைத்து வருவார்கள்.
அங்கு மஞ்சள் தண்ணீரை சிறுமிகளின் தலையில் ஊற்றி ஆசீர்வாதம் செய்கிறார்கள். பின்னர் சிறுமிகளை ஊர்வலமாக அழைத்துச் சென்று குளிக்கச் செய்து,கலாச்சார புத்தாடை அணிவித்து அங்கு சிறுமி கையால் தேங்காய் உடைக்கும் முக்கிய சடங்கு நிகழ்வு நடக்கிறது. பின்னர் சிறுமியின் தலையில் தண்ணீர் நிறைத்த பாத்திரத்தை வைத்து வாத்திய இசையுடன் உறவினர்களுடன் வீட்டிற்குள் அழைத்துச் செல்கிறார்கள். அங்கு பெண்கள் மற்றும் சக தோழிகள் வந்து சிறுமிக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்கள். தொடர்ந்து மதியம் சுப வேளையில் சிறுமிக்கு கலாச்சார உடைகள் மற்றும் அணிகலன்கள் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டு வெளியே பெரியவர்கள் அழைத்து வருகிறார்கள்.
31 ஆம் நாள் மதியம் தான் சிறுமியின் முகத்தைஆண்கள் பார்க்க முடியும். சடங்குகளின்போது சிறுமியின் முகம் தலைமுடியால் மூடப்பட்டிருக்கும். பின்னர் அனைவரும் சிறுமிக்கு வாழ்த்து தெரிவித்து பணம் மற்றும் வெற்றிலை பாக்கு வைத்து ஆசிர்வாதம் செய்கிறார்கள். அதனை தொடர்ந்து அனைவருக்கும் விருந்து வழங்கப்படுகிறது.
காட்டுநாயக்கர் சமுதாய பழங்குடியின மக்களில் பெண் குழந்தைகளுக்கு முதல் நிகழ்வாக இந்த சடங்கு செய்யப்படுகிறது. நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெரியவர்கள் பெண்பார்ப்பதுடன், உறவினர்கள் மத்தியில் கலந்துரையாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொள்வதும், தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தில் உள்ள தங்கள் உறவினர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதும் சிறப்பு வாய்ந்ததாகும்.

