/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நெல்லியாளம் நகராட்சி அலுவலகம் முற்றுகை
/
நெல்லியாளம் நகராட்சி அலுவலகம் முற்றுகை
ADDED : மே 30, 2025 11:29 PM

பந்தலுார் : நெல்லியாளம் நகராட்சி, 16-வது வார்டில், தடுப்பு சுவர் பணியை பாதியில் விட்டதால், பாதிக்கப்பட்ட மக்கள் நகராட்சியை முற்றுகையிட்டனர்.
நெல்லியாளம் நகராட்சியில் மொத்தம், 21 வார்டுகள் உள்ளன. அதில், 16-வது வார்டில் தேவாலா திருவள்ளுவர் நகர் அமைந்துள்ளது.
மேட்டுப்பாங்கான பகுதியில் உள்ள இந்த பகுதியின் கவுன்சிலராக அ.தி.மு.க.,வை சேர்ந்த செல்வ ராணி உள்ளார். கிராமத்திற்கு செல்லும் சாலை மோசமான நிலையில் பழுதடைந்ததால், அதனை சீரமைக்கும் வகையில், 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதன் தடுப்பு சுவர் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டதால், சாலை பணியும் முழுமை அடையாமல் தற்போது மழையில் மக்கள் நடந்து செல்ல முடியாத நிலையில் சிரமப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து கவுன்சிலர் மற்றும் தலைவருக்கு புகார் கொடுத்தும் கண்டுகொள்ளாத நிலையில், கிராம மக்கள் நேற்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கமிஷனர் சுவிதாஸ்ரீ பொதுமக்களுடன் பேசினார்.
அப்போது, 'சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரை கொண்டு, 10 நாட்களுக்குள் பணியை நிறைவு செய்ய, பணி மேற்பார்வையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சம் ஒப்பந்ததாரர் மற்றும் பணி மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார். இதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.