/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புதிய அங்கன்வாடி திறப்பு; குழந்தைகள் 'குஷி'
/
புதிய அங்கன்வாடி திறப்பு; குழந்தைகள் 'குஷி'
ADDED : பிப் 20, 2025 09:52 PM

பந்தலுார் ; பந்தலுார் அருகே பிதர்காடு பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டடம் திறக்கப்பட்டது.
பந்தலுார் அருகே பிதர்காடு, பதினெட்டுகுன்னு பகுதியில், கடந்த, 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த, அங்கன்வாடி கட்டடம் கடந்த மூன்று ஆண்டுக்கு முன்னர் இடிந்து விழுந்தது.
இதனால், அங்கன்வாடி மையம் செயல்பட கட்டடம் இல்லாத நிலையில், அருகிலுள்ள சமுதாய கூடத்தில் தற்காலிகமாக அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது.
குழந்தைகளுக்கு போதிய வசதி இல்லாத நிலையில், 'தினமலர்' நாளிதழ் செய்தி வெளியானது. அப்பகுதி மக்களும் கலெக்டரிடம் புதிய கட்டடம் கோரி மனு கொடுத்தனர்.
தொடர்ந்து கூடலுார் ஊராட்சி ஒன்றிய சார்பில், 17.85 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய அங்கன்வாடி மையம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது.
தற்போது, கட்டடம் பணி முழுமை அடைந்துள்ள நிலையில், குழந்தைகளை கவரும் வகையில் ஓவியங்களால், வண்ண கல்விக்கூடமாக மாற்றம் செய்யப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. மைய ஆசிரியை குமாரி வரவேற்றார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் ராஜேஸ்வரி கட்டடத்தை திறந்து வைத்து பேசுகையில், ''குழந்தைகளுக்கு பள்ளி செல்லும் ஆர்வத்தை துாண்டும் வகையில், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் வழங்கி சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையிலும், அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. எனவே, பெற்றோர் குழந்தைகளை அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களில் சேர்த்து, சிறந்த மாணவர்களாக உருவாவதற்கு ஒத்துழைக்க வேண்டும்,'' என்றார். மையத்துக்கு வந்த குழந்தைகள் ஓவியங்களை பார்த்து 'குஷி' அடைந்தனர்.
நிகழ்ச்சியில், சமூக ஆர்வலர்கள் நவ்ஷாத், சங்கீதா, செமீர், ரபீக், ஜுனேஸ், முன்னாள் வார்டு உறுப்பினர் பவுசியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.