/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புதிய கட்டுமான பணிகள் பாதுகாப்பு வசதிகள் அவசியம்
/
புதிய கட்டுமான பணிகள் பாதுகாப்பு வசதிகள் அவசியம்
ADDED : மார் 14, 2024 11:49 PM
ஊட்டி:'நீலகிரியில் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தாமல் குடியிருப்பு மற்றும் வணிக கட்டடங்கள் கட்ட கூடாது,' என, கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
ஊட்டியில் குடியிருப்பு மற்றும் வணிக கட்டடங்கள் கட்டுவதற்கு, பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் தொடர்பாக, ஆலோசனை கூட்டம் நடந்தது.
கலெக்டர் அருணா தலைமை வகித்து பேசியதாவது:
நீலகிரி மாவட்டத்தில், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் குடியிருப்பு மற்றும் வணிக கட்டடங்கள் கட்டும் போது, உரிய அனுமதியின்றி பொதுமக்கள் யாரும் கட்டடம் கட்ட கூடாது.
ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டதில், 'தடுப்புச் சுவர் கட்டும் பணிக்கு மண் வேலைகள் மேற்கொள்ளப்பட்டதும், இப்பணிக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் ஏதும் ஏற்படுத்தாமலும், பணியாளர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமலும் பணி நடந்துள்ளது,' என, தெரியவந்தது.
எனவே, அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு, உரிய பாதுகாப்பு வசதிகள் செய்யாமல், எவ்வித பணிகளையும் மேற்கொள்ள கூடாது.
இதனை முறையாக கண்காணிக்க சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களுக்கு உத்தரவிடப்படுகிறது. மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட அறிவுரைகளை பின்பற்றாமல் பாதுகாப்பு வசதிகள் இல்லாமல், பணிகள் மேற்கொள்ளும் கட்டட உரிமையாளர்கள், சம்மந்தப்பட்ட பொறியாளர்கள், கனரக இயந்திர உரிமையாளர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, கலெக்டர் பேசினார்.
கூட்டத்தில், நீலகிரி எஸ்.பி., சுந்தர வடிவேல், கூடுதல் கலெக்டர் கவுசிக், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராஹீம்ஷா உட்பட பொறியாளர்கள் பலர் பங்கேற்றனர்.

