ஆட்சியை கலைத்து தேர்தலை சந்திக்க வேண்டும்!சூலூர் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பரபரப்பு பேட்டி
ஆட்சியை கலைத்து தேர்தலை சந்திக்க வேண்டும்!சூலூர் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பரபரப்பு பேட்டி
ADDED : ஆக 25, 2017 11:22 PM
சூலுார்;''தற்போது அ.தி.மு.க., யார் கட்டுப்பாட்டில் உள்ளது என தெரியவில்லை. பதவிக்காக சண்டை தான் நடக்கிறது. அதனால், ஆட்சியை கலைத்து விட்டு, மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்,'' என, சூலுார் தொகுதி எம்.எல்.ஏ., கனகராஜ் கூறினார்.
சூலுார் எம்.எல்.ஏ., கனகராஜ் (அ.தி.மு.க.,)நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:இரு அணிகளாக பிரிந்து செயல்பட்ட முதல்வர் பழனிசாமி அணியும், பன்னீர்செல்வம் அணியும் தற்போது இணைந்துள்ளன. இந்த ஆட்சி நிலைக்குமா, என தெரியவில்லை. பழனிசாமி அணியுடன் இணைந்து, பன்னீர்செல்வம் துணை முதல்வர் பதவியை பெற்றுக்கொண்டார். இதனால், அவர் மீது இருந்த மரியாதை குறைந்து விட்டது.தற்போது அ.தி.மு.க., யார் கட்டுப்பாட்டில் உள்ளது என தெரியவில்லை. யார் தலைமை என்பதும் தெரியவில்லை. பதவிகளுக்காக சண்டைதான் நடக்கிறது. அதனால், இந்த ஆட்சியை கலைத்து விட்டு, மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்.
மூன்று அணிகளையும் இணைத்து, யார் முதல்வர் எனக்கூறி, மக்களை சந்திக்க வேண்டும்.மக்கள் ஏற்றுக்கொண்டால் மீண்டும் ஆட்சி அமைக்கலாம். மூன்று அணிகளையும் இணைப்பவர் தான் உண்மையான தலைவராக இருக்க முடியும். ஜெயலலிதா மரணம் தொடர்பாக, சசிகலா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனில், தண்டனை முடிந்து வெளியே வந்தபின், கட்சியின் பொதுசெயலாளராக பணியாற்ற வாய்ப்பு உருவாகும். இவ்வாறு, எம்.எல்.ஏ., கனகராஜ் கூறினார்.
