பழங்குடியின மக்களின் வாழ்வியல் முறைகள் : ஆவணப்படமாக்க மத்திய அரசு திட்டம்
பழங்குடியின மக்களின் வாழ்வியல் முறைகள் : ஆவணப்படமாக்க மத்திய அரசு திட்டம்
ADDED : நவ 07, 2013 01:48 AM
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் வாழும் பழங்குடியின மக்களின் தற்போதைய வாழ்வியல் முறைகளை ஆவணப்படமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நீலகிரி
மாவட்டத்தின், 'மண்ணின் மைந்தர்கள்' என்ற பெருமைக்குரிய, தோடர், கோத்தர்,
பனியர், இருளர், குரும்பர், காட்டு நாயக்கர், முள்ளுக் குரும்பர் இன
பழங்குடியின ஆதிவாசி மக்கள், மாவட்டத்தின் பல இடங்களில் வாழ்ந்து
வருகின்றனர். 'மந்து' என அழைக்கப்படும், அவர்களின் வாழ்விடத்தில், பழமை
மாறா வீடுகள், கோவில், விவசாய முறை என, தங்களின் கலாசாரம் மாறாமல் வாழ்ந்து
வருகின்றனர். முதல் மரியாதை இருப்பினும், வனம், அதை சார்ந்த
பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களுக்கு, நல்ல உணவு, உடை, இருப்பிடம்
என்பது, இதுவரை எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. ஆதிவாசி மக்களுக்கு தான்
'முதல் மரியாதை' என்ற அடிப்படையில், ஆட்சிக்கு வரும் அரசுகள், இலவசம்,
விலையில்லா, என்ற பெயரில் வழங்கும் 'டிவி' சமையல் காஸ் இணைப்பு, மிக்சி,
கிரைண்டர், இண்டக்ஷன் அடுப்பு போன்றவற்றை, பழங்குடியின மக்களுக்கு தான்
முதலில் வழங்குகின்றன. இருப்பினும், பல பழங்குடியின மக்களின் வீடுகளில்,
அவை காட்சிப் பொருட்களாகவே உள்ளன. குறைந்து போன வேலை வாய்ப்பு நகர்புறங்கள்,
நகரவாசிகளை விட்டு சற்று விலகியே வாழ்ந்து வந்த பழங்குடியின மக்கள்,
வனங்களில் கிடைக்கும் சிறுவன மகசூல் பொருட்கள், தேன் சேகரிப்பு என, வனம்
மற்றும் இயற்கை சார்ந்த தொழிலில் தான் பெரும்பாலும் ஈடுபட்டு வந்தனர்.
இருப்பினும், தற்போது, வேலை வாய்ப்பு தேடி நகர்புறங்களுக்கு வந்து,
நகரவாசிகளுடன் பழக துவங்கியுள்ளனர். நகர்புறங்களில் ஆக்கிரமித் துள்ள
மொபைல் போன், இன்டர்நெட், இ-மெயில் போன்ற தொழில்நுட்பங்களை, பல பழங்குடியின
மக்கள் வியந்து பார்க்கும் நிலை தான் உள்ளது.
ஆவணப்பட திட்டம்
'காலம்
மாறினாலும், காட்சிகள் மாறவில்லை' என்ற நிலையில், மத்திய பழங்குடியினர் நல
அமைச்சகம், நீலகிரியில் வாழும் பழங்குடியின மக்களின் தற்போதைய வாழ்வியல்
முறைகளை, ஆவணப்படமாக்க திட்டமிட்டு, அதற்கான பணியை ஒரு தனியார்
நிறுவனத்திடம் வழங்கியுள்ளது. அதன்படி, நீலகிரியில் வாழும் பழங்குடியின
மக்களின் சுப, துக்க நிகழ்ச்சிகள், அன்றாட வாழ்க்கை முறை, நகரவாசிகளுடன்
அவர்களின் பழக்க வழக்கங்கள், கலாசாரம் போன்றவற்றை ஆவணப்பட மாக்கும்
முதற்கட்டப் பணிகள் துவங்கியுள்ளன. அந்தந்த பழங்குடியின சமுதாய தலைவர்களின்
கருத்துக்கள், சமுதாய தேவைகள் போன்றவையும் படமாக்கப்பட்டு பழங்குடியின
அமைச்சகத்துக்கு சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில்,
பழங்குடியின மக்களின் நலன் காக்கும் திட்டங்களை மத்திய அரசு வகுக்கும் என,
கூறப்படுகிறது.
