ADDED : பிப் 05, 2026 06:22 AM
கோத்தகிரி: கோத்தகிரி மார்க்கெட் அருகே தனியார் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் இரவு காவலாளி ஜனக் என்பவர் அங்குள்ள குடியிருப்பில் தங்கி பணிபுரிந்து வருகிறார்.
இவரது மூத்த மகன், பகதுார், 25, பெங்களூருவில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். ஒரு வாரம் விடுமுறையில் தனது தந்தை தங்கி உள்ள கோத்தகிரி வீட்டிற்கு வந்துள்ளார்.
கம்பெனி பணி நிமித்தமாக, வேலையில் ஈடுபட்டபோது, 'நெட்ஒர்க்' கிடைக்காததால், நேற்று முன்தினம் இரவு, 11:30 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். குறிப்பிட்ட நேரத்தில், பள்ளி வளாகத்திற்குள் வளர்ப்பு நாயை சிறுத்தை தாக்க முயன்றுள்ளது.
விரட்ட முயன்ற பகதூரை, சிறுத்தை கை மற்றும் முகத்தை தாக்கி உள்ளது. கோத்தகிரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக, ஊட்டி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க, வனத்துறையிடம் கோரிக்கை விடுத்தனர்.
