/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழங்குடியினர் மத்தியில் விவசாயத்தை மேம்படுத்த முயற்சி; நீலகிரி ஆதிவாசி சங்கம் தகவல்
/
பழங்குடியினர் மத்தியில் விவசாயத்தை மேம்படுத்த முயற்சி; நீலகிரி ஆதிவாசி சங்கம் தகவல்
பழங்குடியினர் மத்தியில் விவசாயத்தை மேம்படுத்த முயற்சி; நீலகிரி ஆதிவாசி சங்கம் தகவல்
பழங்குடியினர் மத்தியில் விவசாயத்தை மேம்படுத்த முயற்சி; நீலகிரி ஆதிவாசி சங்கம் தகவல்
UPDATED : செப் 28, 2025 11:18 PM
ADDED : செப் 28, 2025 10:02 PM

பந்தலுார்,; ;நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் மத்தியில், விவசாயத்தை மேம்படுத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
பந்தலுார் அருகே கையுன்னி பழங்குடியினர் கிராமத்தில், நீலகிரி ஆதிவாசி சங்கம், இன்போசிஸ் மற்றும் நிவேதிதா தன்னார்வ அமைப்புகள் இணைந்து, பழங்குடியின மக்கள் மத்தியில் விவசாயத்தை மேம்படுத்துவதற்கான, துவக்க நிகழ்ச்சியை நடத்தினர்.
'நாவா' நிர்வாகி புஷ்பகுமார் வரவேற்றார். 'நிவேதிதா பவுண்டேஷன்' நிர்வாகி மோகன்ராம் துவக்கி வைத்து பேசினார்.
நீலகிரி ஆதிவாசி சங்க செயலாளர் ஆல்வாஸ் தலைமை வகித்து பேசியதாவது:
கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன்னரே, பழங்குடியின மக்கள் மத்தியில் தேயிலை மற்றும் அதனை சார்ந்த விவசாயத்தை மேம்படுத்துவதற்காக, முயற்சி மேற்கொள்ளப்பட்டு அது தற்போது ஓரளவுக்கு நடைமுறையில் உள்ளது.
தொண்டு நிறுவனங்கள் அரசு நிர்வாகத்துடன் இணைந்து, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் நிலையில், பெரும்பாலான பழங்குடியின பயனாளிகள் அதன்மூலம் தங்களின் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள முன் வராதது வருத்தம் அளிப்பதாக உள்ளது.
அதற்காக தற்போது ஒவ்வொரு பழங்குடியின சமுதாயத்திலும், தனித்தனி குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, அந்த சமுதாயத்திற்கு என்ன தேவையோ அதனை அவர்களே நேரடியாக சென்று அரசு நிர்வாகத்திடம் பெற்று பயன் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
குறிப்பாக விவசாயம் செய்வதால், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்பதுடன், அவர்களின் குழந்தைகளின் கல்வித்தரமும் ஏற்றம் காணும் என்பதில் ஐயமில்லை. விவசாயம் எந்த நேரத்திலும் விவசாயிகளை கைவிடாது என்பதால், பழங்குடியின மக்கள் மறைந்து வரும் விவசாயத்தை மேம்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும், இவ்வாறு அவர் பேசினார்.
பயனாளிகளுக்கு நாற்றுகளை வழங்கி, காபி வாரிய முதன்மை ஆலோசகர் ஜெயராமன் பேசுகையில், '''காபி நடவு செய்து மூன்றாவது வருடத்தில், பலன் தர ஆரம்பிக்கும் நிலையில், நல்ல பலன் தரும் விவசாயம் ஆகும். தற்போது, உலர வைக்கப்பட்ட காபி கொட்டைகள் கிலோவிற்கு, 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விவசாயத்தை முறையாக மேற்கொண்டால், நல்ல விளைச்சல் மற்றும் அதற்கேற்ப வருவாய் கிடைக்கும். காபி விவசாயிகளுக்கு துறை சார்ந்து கல்வி உதவித்தொகை மற்றும் இடுபொருட்கள், தேவையான கருவிகள் மானிய விலையில் வழங்கப்படும் நிலையில் அதனைப் பெற்று பயன்பெற வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, வனவர் முத்தமிழ், வி.ஏ.ஓ., சுரேஷ், பள்ளி முதல்வர் பூவிழி, பழங்குடியினர் சமுதாய தலைவர்கள் அச்சுதன், சந்திரன், வெள்ளன், திட்ட மேலாளர் விஜயா, ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் உள்ளிட்டோர் பேசினர். 200 பயனாளிகளுக்கு முதல்கட்டமாக தேவையான நாற்றுகள் வழங்கப்பட்டது. திட்ட மேலாளர் அபிலாஷ் நன்றி கூறினார்.