/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரி சுற்றுலா தலங்கள் மூன்றாவது நாளாக மூடல்
/
நீலகிரி சுற்றுலா தலங்கள் மூன்றாவது நாளாக மூடல்
ADDED : ஜூலை 26, 2025 10:51 PM

ஊட்டி:நீலகிரியில் கனமழையால், மூன்றாவது நாளாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
-நீலகிரி மாவட்டத்தில், சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக அவலாஞ்சி, 11 செ.மீ., அப்பர்பவானி, 8 செ.மீ., நடுவட்டம், 7 செ.மீ., மழை பதிவானது.
வானிலை ஆய்வு மையம் நீலகிரிக்கு, ' ஆரஞ்சு அலெர்ட்' விடுத்துள்ளது. ஊட்டியில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, தொட்டபெட்டா சிகரம், பைன் பாரஸ்ட், எட்டாவது மைல் ட்ரீ பார்க் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூன்றாவது நாளாக மூடப்பட்டன. மற்ற சுற்றுலா தலங்களும் பயணியரின்றி வெறிச் சோடின.
கூடலுார் சுற்றுவட்டாரத்தில், காற்றுடன் விடிய விடிய மழை பெய்தது. கோழிக்கோடு சாலை, மரப்பாலத்தில் மூன்று பாக்கு மரங்கள், கணேசன் என்பவரின் வீட்டின் மீது விழுந்ததில், மேற்கூரை சேதமடைந்தது. வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
பந்தலுார் அருகே, சோலாடி சோதனைச்சாவடியில், மூன்று பெரிய மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்தன. நீலகிரியிலிருந்து கேரளாவுக்கு வாகன போக்குவரத்து தடைப்பட்டது. தீயணைப்பு, போலீசார், வனத்துறையினர் இணைந்து மரத்தை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர்.
தேவாலா அரசு பள்ளியில், பலத்த காற்றுக்கு மேற்கூரை, 200 மீட்டர் பறந்தது. குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவிலான மரங்கள் விழுந்தன. மழை தொடர்ந்து பெய்வதால் கடுங்குளி ரால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.