/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கொண்டாட்டம் இல்லை! மயான அமைதியில் வயநாடு சூரல்மலை கிராமங்கள்; முகாமில் வசிக்கும் மக்கள்
/
கொண்டாட்டம் இல்லை! மயான அமைதியில் வயநாடு சூரல்மலை கிராமங்கள்; முகாமில் வசிக்கும் மக்கள்
கொண்டாட்டம் இல்லை! மயான அமைதியில் வயநாடு சூரல்மலை கிராமங்கள்; முகாமில் வசிக்கும் மக்கள்
கொண்டாட்டம் இல்லை! மயான அமைதியில் வயநாடு சூரல்மலை கிராமங்கள்; முகாமில் வசிக்கும் மக்கள்
ADDED : அக் 13, 2024 09:58 PM

பந்தலுார் : கேரளா வயநாடு மாவட்டம், சூரல்மலை மற்றும் முண்டக்கை பகுதிகள், ஆயுதபூஜை பண்டிகை கால கொண்டாட்டம் இன்றி மயான அமைதியில் காணப்பட்டன.
கேரள மாநிலம் செல்லும் சுற்றுலா பயணிகள், வயநாடு மாவட்டம் மேப்பாடி மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளான, சூரல்மலை, முண்டக்கை மற்றும் புஞ்சிரிமட்டம் ஆகிய பகுதிகளை பார்த்து ரசிக்க தவறுவதில்லை.
இந்த பகுதியில் உள்ள அழகிய தேயிலை தோட்டம், அதனை ஒட்டிய மேட்டுப்பாங்கான வனப்பகுதிகள், மலைகளை தவழ்ந்து செல்லும் மேக கூட்டங்கள், தேயிலை தோட்டங்களில் உள்ள கண்ணாடி பாலம், மெகா ஊஞ்சல் கண்கொள்ளா காட்சியாக இருந்தன.
இங்கு சுற்றுலாவுடன், தேயிலை துாள் உற்பத்தி முக்கிய தொழிலாக உள்ளதால், தோட்ட தொழிலாளர்கள் அதிகளவில் குடியிருந்து வந்தனர். இதனை ஒட்டிய கிராமப்பகுதியில் இருந்தவர்களும், அனைத்து பண்டிகைகளிலும் ஒன்றாக இணைந்து மகிழ்ச்சியை பகிர்ந்து, கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வழக்கம்.
திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு
இந்நிலையில்,கடந்த ஜூலை, 30ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில், முண்டக்கை மற்றும் புஞ்சிரிமட்டம் பகுதிகள் அடியோடு காணாமல் போனது. சூரல் மலைப்பகுதியிலும் நுாற்றுக்கணக்கான குடியிருப்புகள் காணாமல் போனது. 400 பேர் பலியாகினர்.
இந்த பகுதியில் இருந்த அனைத்து மக்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், இப்பகுதி தற்போது அமைதியாக காணப்படுகிறது.
மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மரங்கள், பாறைகள் என குவிந்து கிடப்பதுடன், வீடுகள் இருந்த இடம் கூட தென்படவில்லை. முகாம்களில் வசிக்கும் மக்கள், மீண்டும் தங்கள் குடியிருந்த பகுதிகளை பார்ப்பதற்கு மனம் இல்லாத நிலையில் அங்கேயே உள்ளனர்.
அங்கு காணப்பட்ட, பிரபலமான சிவன் கோவில் காணாமல் போன நிலையில், தற்போது ஒரு பேனர் மட்டும் வைத்து கோவில் இருந்ததற்கான அடையாளத்தை காட்டி வருகின்றனர்.
சூரல் மலையை பார்க்க அனுமதியில்லை
இந்த பகுதியை பார்ப்பதற்கு தற்போது வெளிமாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து, பொதுமக்கள் வந்த போதும், வருவாய் துறை மற்றும் போலீசார் அனுமதிப்பதில்லை.
இதனால், பெரும்பாலும் பண்டிகை காலங்களில் வண்ணமயமாக இந்த பகுதிகள், தற்போது மயான அமைதியில் காணப்படுவது அருகில் வாழும் பல கிராம மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.
இங்கு சுற்றுலா பயணிகளை நாள்தோறும் அழைத்து சென்ற வாகன ஓட்டுனர் அனில் என்பவர் கூறுகையில், ''நாங்கள் இந்த பகுதியில் பல தலைமுறைகளாக குடியிருந்து வந்த நிலையில், மகிழ்ச்சி மட்டுமே எங்களுக்கு மிஞ்சி இருந்தது. ஆனால், நிலச்சரிவு ஏற்பட்ட பின்னர் இந்த பகுதிக்கு யாரும் வர முடியாத சூழலில், உறவுகளை இழந்து, சொந்தங்களை இழந்து தற்போது அனாதையாக நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
சில நாட்களாக அனைத்து இடங்களிலும் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நடந்து வரும் நிலையில், எங்கள் பகுதி மயான அமைதியில் உள்ளது. எங்களுக்கு ஆறுதல் கூற கூட யாரும் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
நிலச்சரிவு நடந்த பகுதிகளை காண யாருக்கும் அனுமதி இல்லை,'' என்றார்.