ADDED : பிப் 13, 2026 05:38 AM

பந்தலுார்: பந்தலுார் பஜாரில் கழிவுகள் கலந்து, நோய் பரப்பும் இடமாக மாறிவரும் நீரோடையை சுத்தம் செய்ய மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பந்தலுார் பஜார் மையப் பகுதியில், கடைகள் மற்றும் குடியிருப்புகளுக்கு மத்தியில் நீரோடை செல்கிறது. இங்கிருந்து செல்லும் தண்ணீர் செம்மண்வயல் மற்றும் செம்பன் வயல் வழியாக சென்று பொன்னானி ஆற்றில் சேர்கிறது.
இந்த நீரோடையில் குடியிருப்புகள் மற்றும் வியாபார நிறுவனங்களின் கழிவுகள், குப்பைகள் உள்ளிட்டவை சேர்ந்து, துர்நாற்றம் வீசும் கழிவு நீராக மாறி வருகிறது.
நீரோடையில் கழிவுகள் கலந்து விடும் நபர்கள் மற்றும் குப்பைகளை கொட்டும் நபர்கள் மீது, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில், மெத்தனம் காட்டி வருவதால், சுகாதாரம் பாதிக்கப்பட்டு, நீர்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுகிறது. எனவே, பல்வேறு தொற்று நோய்களை பரப்பும் இடமாக மாறிவரும், நீரோடையை சுத்தம் செய்து, கழிவுகள் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
