ADDED : பிப் 25, 2024 11:16 PM
கோத்தகிரி:கோத்தகிரியில் பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்து, வட மாநில தொழிலாளி இறந்தது, தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.
நேபாளத்தை சேர்ந்தவர் நரேந்தர் சுதந்த், 37. இவருக்கு, மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவர், கோத்தகிரியில் ஒரு தனியார் கல்லுாரியில் இரவு காவலாளியாகவும், பகலில், ஒரு ஹோட்டலிலும் வேலை செய்து வந்தார். கடந்த, 23ம் தேதிமுதல் இவர் வீட்டிற்கு செல்லாததால், தனது மனைவி கோத்தகிரி போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில், துர்நாற்றம் வீசியுள்ளது. அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது, அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே, பேரூராட்சிக்கு சொந்தமான, மூடப்படாத பழைய கிணற்றில், நரேந்தர் சுதந்த் தவறி விழுந்தது தெரியவந்தது.
தீயணைப்பு துறையினர், போலீசாரின் உதவியுடன், கிணற்றுக்குள் இறந்து கிடந்த உடலை மீட்டு, கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின், அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
