/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தோட்டக்கலை துறையின் மானியம் அறிவிப்பு
/
தோட்டக்கலை துறையின் மானியம் அறிவிப்பு
ADDED : மார் 07, 2024 11:50 AM
ஊட்டி:தோட்டக்கலை துறை மூலம், ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ், மாவட்ட விவசாயிகளுக்காக பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்ட தோட்டக்கலை துறை மூலம், ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ், (2023-24) அறுவடை பின் நேர்த்தி திட்டத்தில் விளை பொருட்களை சேமித்து, மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் நோக்கில், பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
காய்கறி உற்பத்தி பொருட்களை சுத்தம் படுத்தி, பாலிஷ் செய்து சேமிப்புடன் கூடிய, ஒருங்கிணைந்த சிப்பம் கட்டும் அறை அமைக்க, 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு, 35 சதவீதம் மானியமாக, 17.50 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.
காய்கறிகளை, 2.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சேமித்து, பின்னர் விற்பனை செய்ய 'பிரீ கூலிங் யூனிட்' அமைக்க, 25 லட்சம் மதிப்பிலான திட்டத்திற்கு, 35 சதவீதம் மானியமாக 8.75 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
உற்பத்தி செய்யப்பட்டு மதிப்பு கூட்டப்பட்ட காய்கறிகளை பிற இடங்களுக்கு கொண்டு செல்ல குளிர்சாதன வசதியுடன் கூடிய, 9 எம்.டி., கொள்ளளவு கொண்ட வாகனம் பிரீசர் வாங்க, 26 லட்சம் மதிப்பிலான திட்டத்திற்கு, 35 சதவீதம் மானியமாக, 9.10 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ், அறுவடை முதல் விற்பனை வரையிலான திட்டத்திற்கு, 35 சதவீதம் மானியமாக, 2.10 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
காய்கறிகளை சேமிக்க, 4 லட்சம் ரூபாய் நிதியில், 600 சதுர அடி பரப்பிலான சிற்பம் கட்டும் அறை அமைக்க, 50 சதவீதம் மானியமாக ரூபாய் 2 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
தோட்டக்கலை உதவி இயக்குனர் அனிதா கூறுகையில், ''இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள், திட்ட அறிக்கை பின்னேர்ப்பு மானியமாக வழங்கப்படுவதால், வங்கி கடன் பெறுவதற்கான வங்கி ஒப்புதல் கடிதம், வேளாண் கட்டமைப்பு நிதி மூலம் வட்டி மானியம் பெறுவதற்கான விண்ணப்பம், வங்கி கணக்கு விபரம், ஆதார் மற்றும் ரேஷன்கார்டு ஆகியவற்றுடன், தங்கள் பகுதி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்,'' என்றார்.

